இணைய பாதுகாப்பில் 23-வது இடத்தில் இந்தியா: முதலிடத்தில் சிங்கப்பூர்

நிஜ வாழ்க்கையை தாண்டி, இணைய வழியாக நடைபெறும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இணையத்தில் நடக்கும் தவறுகளை கண்காணிக்கவும், தடுக்கவும் இணைய பாதுகாப்பு அவசியமாகிறது. இவ்வாறாக இணையத்தை பாதுகாப்பதில் இந்தியா 23-வது இடத்தை பிடித்திருக்கிறது.

இணைய பாதுகாப்பில் இடம்பெற்றுள்ள 165 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலை ஐ.நா. தொலைத்தொடர்பு முகமை, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய அமைப்பு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இணைய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும், இணைய குற்றங்களுக்கு முட்டுக்கட்டை போடும் நாடுகள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

உலகளாவிய இணைய பாதுகாப்பில் இந்தியா 0.683 புள்ளிகளுடன் 23-வது இடத்தை பிடித்திருக்கிறது. 0.925 புள்ளிகளுடன் இந்த பட்டியலில், சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்திருக்கிறது. இதில் 77 நாடுகள் இணையவழியாக நடக்கும் குற்றங்களை தடுக்க தீவிரம் காட்டி வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் 38 சதவீத நாடுகள் இணைய பாதுகாப்பு குறித்த உத்தியை பின்பற்றி வருகின்றன. 12 சதவீத அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்துவதில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

டிஜிட்டல் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க அரசு, இணைய பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது இந்த அமைப்பின் கோரிக்கையாகும்.

இணைய பாதுகாப்பில் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஓமன், எஸ்தோனியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மற்றும் கனடா முதல் 10 இடங்களை பிடித்திருக்கின்றன. ரஷ்யா 11-வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.