பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடன சட்டமூலம், மேலும் ஆய்வுகள் செய்யப்பட்டு, கலந்துரையாடப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்காவின் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்க நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தச் சட்டமூலத்தை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில்லை என்று சிறிலங்கா அதிபரும், பிரதமரும், இணங்கியிருந்தனர்.
பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடனத்தில், 93 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான சக்திவாய்ந்த நாடுகள் இதில் கையெழுத்திடவில்லை.
இந்த 93 நாடுகளில், 53 நாடுகள் மாத்திரமே, இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளன. தெற்காசியாவில் இந்தியா, சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ள போதிலும், சிறிலங்கா மாத்திரமே ஒப்புதல் அளித்துள்ளது.
பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடனத்தில் சிறிலங்கா 2015 டிசெம்பர் 10ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திட்டது. இதற்கு, 2016 மே 16ஆம் நாள் கூட்டு அரசாங்கம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
பெரும்பாலான நாடுகள்- குறிப்பாக சக்திவாய்ந்த நாடுகள் இன்னமும் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர், நன்கு ஆய்வு செய்து கலந்துரையாட வேண்டும் என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் ஜிஎஸ்பி பிளஸ். சலுகையைப் பெறுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நிபந்தனைகளுக்கு சிறிலங்கா இணக்கம் தெரிவித்திருந்தது.
பொதுவாக, குறிப்பிட்ட நாட்டின் நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்பட்ட பின்னரே, அனைத்துலகப் பிரகடனங்கள் நடைமுறைக்கு வருவது வழக்கம்.
சிறிலங்கா படையினரை துன்புறுத்தும் நோக்காகக் கொண்டே, பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் அனைத்துலக பிரகடனம், கொண்டு வரப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை.
படையினரை துன்புறுத்த எவரையும் அனுமதிக்கப் போவதில்லை என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார்.