பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேதர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நேற்று கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்தார்.
தம்மைக் கைது செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முற்படுவதாக அவர் மகாநாயக்க தேரர்களிடம் முறையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நேற்று மல்வத்த பீ்டத்துக்குச் சென்ற கோத்தாபய ராஜபக்சவிடம், மல்வத்த பீடத்தின் அனுநாயக்க தேரர், அரசியலமைப்புத் தொடர்பாக கூட்டு எதிரணியினர் வெளியிடும் எதிர்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘உத்தேச அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எந்த அடிப்படையும் அற்றது. இது பிறக்காத குழந்தைக்கு சோதிடம் பார்ப்பது போன்றது.
அரசியலமைப்பு வரைவு ஒன்று உருவாக்கப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவது அர்த்தமற்றது.
நாடாளுமன்றத்தில் தினேஸ் குணவர்த்தன ஆவேசமாக ஆற்றும் உரைகளை நான் கவனித்து வருகிறேன். அதில் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
நாங்கள் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, சாதாரண மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தியிருக்கிறோம்.
விலைவாசி அதிகரித்து மக்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதை தெரியப்படுத்தியிருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.