சுமத்ரா தீவு: இந்தோனேஷியாவில் 71வயது மூதாட்டியை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளான். அதிகாரிகள் தடுக்க முயற்சித்தும் தற்கொலை செய்துகொள்வோம் என மிரட்டி காரியத்தை சாதித்துள்ளது அந்த ஜோடி.
காதலுக்கு கண் இல்லை என்பதை போல காதலுக்கு வயதும் இல்லை.. வயது முதிர்ந்த ஆண்கள்தான் வழக்கமாக இளம் பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்.
ஆனால் இந்தோனேஷியாவில் 71 வயது மூதாட்டியை திருமணம் செய்துள்ளான் 16 வயது சிறுவன் ஒருவன். மூதாட்டியின் அன்பில் மயங்கிய சிறுவன் அவரையே திருமணம் செய்து இல் வாழ்க்கையில் இணைந்துள்ளான்.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காராங் என்டா கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் செலாமெட். சிறுவனின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதையடுத்து சிறுவனின் தாய் வேறு ஒரு நபரை திருமணம் செய்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் தனிமையான சிறுவன் தன்னந்தனியாக வசித்து வந்துள்ளான்.
சமீபத்தில் சிறுவன் செலாமெட் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். அப்போது அவனை பக்கத்து வீட்டில் வசிக்கும் 71 வயது மூதாட்டி ரொகாயா பின்டி என்பவர் நல்ல முறையில் கவனித்துக் கொண்டதாக தெரிகிறது.
மூதாட்டியின் அன்பும் பரிவும் செலாமெட் ரியாடியை கவர்ந்தது. அதுவே நாளடைவில் காதலாக மாறியது.
அதை தொடர்ந்து சிறுவன் செலாமெட் மூதாட்டி ரொகாயாவை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்தான். அதை அறிந்த அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றனர்.
தங்களது திருமணத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வோம் என காதல் ஜோடி மிரட்டியது. இதையடுத்து அதிகாரிகள் பின்வாங்கியதை தொடர்ந்து கடந்த வாரம் சிறுவனும் மூதாட்டியும் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் மூதாட்டியின் குடும்பத்தினர் உள்பட கிராம மக்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சிறுவனை திருமணம் செய்த மூதாட்டி எராகியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.
இவர்களின் திருமணம் தான் தற்போது இந்தோனேசியா முழுவதும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும் மூதாட்டி மற்றும் சிறுவனின் திருமணத்தால் சுமத்ரா தீவு நிலநடுக்கத்துக்கு சமமான பரபரப்பை அடைந்துள்ளது