சென்னை: விமான நிலையத்தில் ஐஎஸ் ஆதரவாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளி நாடு தப்பி செல்ல முயன்ற அவரை தமிழக போலீசாருக்கே தெரியாமல் டெல்லி தேசிய புலனாய்வுத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 25 வயது இளைஞர் சுல்தான் அகமது. இவர், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்றும் தமிழ்நாட்டில் இருந்து மேலும் சிலரை அந்த இயக்கத்தில் சேர்க்க முயன்று வருகிறார் என்றும் மத்திய உளவுத்துறையினருக்கு தகவல் வந்தது
இந்நிலையில் சுல்தான் அகமது நேற்று முன்தினம் மாலை 4.05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தார். இதை தெரிந்து கொண்ட தேசிய புலனாய்வு துறையினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சுற்றி வளைத்து கைது
அப்போது சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சுல்தான் அகமது அனைத்து சோதனைகளையும் முடித்து விமானத்தில் ஏற தயாராக இருந்தார். அப்போது தேசிய புலனாய்வு துறை தனிப்படை அதிகாரிகள் சுல்தான் அகமதுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். சில சம்பவங்களில் முக்கியப்புள்ளி பின்னர் விமான நிலைய தனி அறையில் வைத்து மத்திய உளவு பிரிவு அதிகாரிகளும், டெல்லியில் இருந்து வந்த தேசிய புலனாய்வு துறை அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இவர் அசாம், மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த ஒரு சில சம்பவங்களில் முக்கிய புள்ளியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.
விமானம் மூலம் டெல்லிக்கு..
இதையடுத்து சுல்தான் அகமது நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டடார். டெல்லியில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிகிறது. ரகசியமாக கைது இதற்கிடையே சுல்தான் அகமதோடு சம்பந்தப்பட்ட ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடத்துகின்றனர். தமிழக போலீசாருக்கு கூட தெரியாமல் மிக ரகசியமாக சுல்தான் அகமதுவை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.