உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளாமல், இந்தியாவுக்குச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் உபபொலிஸ் பரிசோதகராகக் கடமையாற்றி வரும் ஸ்ரீகஜன் என்பவரே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
திருட்டு நகைகளைக் கொள்வனவு செய்பவர்களிடமிருந்து யாழ்ப்பாணப் பொலிஸார் சிலர் தரகுப் பணம் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
இதன் பின்னர்,யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஸ்ரீகஜன், வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றப்பட்டார்.
இது வழமையான இடமாற்றம் என்று பொலிஸ் தரப்பினர் தெரிவித்திருந்தனர்.
வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய ஸ்ரீகஜன், விடுமுறையில் இருக்கும்போதே இந்தியாவுக்குச் செல்ல முயன்றுள்ளார். அவர் உரிய அனுமதிகளைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்தியாவுக்குச் செல்ல முயன்ற ஸ்ரீ கஜன், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மறித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
வித்தியா கொலை வழக்குடன் தொடர்புடையவர் என்பதால் அவர் திருப்பி அனுப்பப்பட்டார் என்று குறிப்பிட்டனர்.
இதேவேளை, வித்தியா கொலை வழக்கு தொடர்பான ட்ரயல் அட்பார் விசாரணையில் சாட்சியமளித்திருந்த சட்டத்தரணி வி.ரி.தமிழ்மாறன்,
உபபொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் கேட்டுக் கொண்டதற்கு அமைவாகவே சந்தேகநபரான சுவிஸ்குமாரை தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்து யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.