யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் முச்சக்கரவண்டியொன்று இன்று நண்பகல் திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. இது மீள் பாவனைக்கு உட்படுத்தமுடியாத நிலையில் முற்றுமுழுதாக எரிந்து கருகியுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதி பகுதியில் இயங்கிவரும் வாகனம் திருத்தும் இடம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த முச்சக்கரவண்டியை வாகன திருத்துமிடத்தின் பணியாளர்கள் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இருப்பினும் விரைந்து செயற்பட்ட பணியாளர்கள் குறித்த முச்சக்கரவண்டியை வெளியே இழுத்து விட்டதனால் ஏனைய வாகனங்களுக்கும் தீ பரவும் பேரனர்த்தமொன்று தடுக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.
குறித்த முச்சக்கர வண்டியில் அதிகமான பெற்றோல் நிரப்பப்பட்டிருந்ததாகவும் இதன் காரணமாக ஏற்பட்ட எண்ணெய்க் கசிவே விபத்து நிகழ்ந்தமைக்கான காரணம் என்றும் நம்பப்படுகிறது.