நீங்கள் ருசிகரமான உணவுப் பயணம் மேற்கொள்ள என்ன காரணம்?
ராக்கி: எங்கள் உருவத்தைப் பாருங்கள்! எங்களுக்கும், உணவுகளுக்கும் இடையிலான பந்தம், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது. எந்த உணவையும் பார்த்தாலே போதும், முதல் பார்வையிலேயே எங்களுக்கு அதன் மீது காதல் பிறந்துவிடும்! உணவுக்கும், எங்களுக்குமான பந்தம் விவரிக்க முடியாத அளவுக்கு பரந்து விரிந்தது.
நாடெங்கும் பயணித்து பல்வேறு உணவுகளை ருசிக்க உங்களைத் தூண்டியது எது?
மயூர்: கடந்த 10 ஆண்டுகளில், சாலை வழியாக மட்டும் நாங்கள் 4 லட்சம் கி.மீ. தூரம் பயணித்துள்ளோம். விமான, ரெயில் பயணங்கள் தனி. நாடெங்கும் சென்று வகைவகையாய் உணவுகளை ருசி பார்க்கிறோம். உணவு என்பது எல்லோரும் விரும்பும் விஷயம். அது நம் நாட்டை அறிவதற்கு அழகான வழி. உணவை அடிப்படையாகவைத்து பார்த்தால் நாம் எல்லோரும் ஒன்றுதான். தென்னிந்திய உணவு, வடஇந்திய உணவு, கிழக்கிந்திய உணவு என்றெல்லாம் பிரிக்கவேண்டியதில்லை. எல்லாமே இந்திய உணவுகள்தான். ஒவ்வொன்றுக்கும் ஒரு தனிச் சுவை இருக்கிறது. ஓர் உணவை எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம், ஆனால் அதில் கலந்திருக்கும் அன்பும், ஒன்றாக அமர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிடுவதும்தான் ஆதாரமான விஷயங்கள்.
ராக்கி: நாங்கள் டெலிவிஷனில் இந்த நிகழ்ச்சியை ஆரம்பித்தபோது, இந்தியாவில் உணவகங் களின் நிலை கொஞ்சம் ஒழுங்கின்றித்தான் இருந்தது. பர்கர் கடைகள், சீன உணவகங்கள் பெருகிக்கொண்டிருக்க, இந்தியர்கள் பலரும் சர்வதேச உணவுகளை நோக்கி நகர ஆரம்பித்திருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே எங்களின் ஒரே இலக்கு, அருமையான, அற்புதமான இந்திய உணவுப் பாரம்பரியத்தை நமது மக்களுக்கு அறிமுகப் படுத்துவதுதான். இப்படி நாங்கள் உணவுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவராவிட்டால் பலதும் மறைந்தே போகும். நமக்கு அப்படி ஒரு உணவுச் செல்வமும், பரந்த அறிவும் இருக்கின்றன. கடந்த பல ஆண்டுகளில், நானும் மயூரும் இந்தியா முழுவதிலும் 7 ஆயிரம் விதமான உணவுகளைச் சுவைத் திருக்கிறோம். இதற்கே ஆச்சரியப்படாதீர்கள். நாங்கள் வெறும் 10 சதவீத உணவுகளைத்தான் ருசித்திருக்கிறோம். இன்னும் சுமார் ஒரு லட்சம் வகை உணவுகளை ருசி பார்க்க வேண்டியிருக்கிறது. அதை நாங்கள் செய்யாவிட்டால், வேறு யார் செய்வார்கள்? உணவுகளைச் சுவைப்பது எங்களுக்கு ஆண்டவன் இட்ட கட்டளை. நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வகை உணவுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ‘சூப்பர் ஹீரோக்கள்’ நாங்கள்!
பலரும் அறியாத உணவுகளை உங்களால் எப்படி வெளியே கொண்டுவர முடிகிறது?
ராக்கி: விதவிதமான இந்திய உணவுகளை அறிமுகப்படுத்துவதற்கு, எங்களுடையதைப் போன்ற டி.வி. நிகழ்ச்சிகள் அருமையான வழி. உணவகத் தொழில் விறுவிறுப்பாக வளர்ந்துவரும் நிலையில், அந்தந்தப் பகுதி ‘ஸ்பெஷல்’ உணவுகளுக்கான வாய்ப்புகள் நாடெங்கும் அதிகரித்திருக்கின்றன. தற்போது, வீட்டில் சமைப்பவர்கள் கூட தங்கள் கைமணத்தை காசாக்கும் வசதிகள் உருவாகியிருக்கின்றன. அதற்கு இணையதளங்கள் உதவுகின்றன. இப்படி பல வழிகளில், அதிகம் அறியப்படாத உணவு வகைகளை வெளியே கொண்டுவரலாம்.
இந்திய உணவுகளின் தனிச்சிறப்பு என்ன?
ராக்கி: இந்திய உணவுகளின் தனிச்சிறப்பு, அவற்றில் பயன்படுத்தப்படும் மசாலாக்கள்தான். நாங்கள் சாப்பிட்ட பல்வேறு உணவுகள், தனித்தன்மையான மசாலா கலவையைக் கொண்டவை. கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக, மசாலாக்களை சிறப்பாகப் பயன்படுத்துவதில் நாம் தேர்ச்சி கண்டிருக்கிறோம். மற்றபடி, மாற்றம் ஒன்றே மாறாதது. அதற்கு உணவுகளும் விதி விலக்கு அல்ல. வருங்காலத்தில், இந்திய உணவுகள் சாப்பிடுவதற்கு இன்னும் எளிதானவையாக ஆகப் போகின்றன. உணவுகளை காட்சிப்படுத்தும் விதத்திலும் நாம் பெரிதும் வளர்ந் திருக்கிறோம்.
எந்த மாநில உணவுகள் உங்களுக்கு மிகவும் பிடித்தவை?
ராக்கி: உணவு விஷயத்தில் நான் ஒரு மாநிலத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்றால், கேரளாவைத்தான் தேர்வு செய்வேன். அம்மாநிலத்தின் சிரிய கிறிஸ்தவ உணவுகளாகட்டும், அரேபிய தாக்கத்திலான உணவுகளாகட்டும், தெற்குக் கேரள உணவுகளாகட்டும் எல்லாமே அற்புதம். பிடித்த உணவு நகரம் என்றால், பெங்களூரு. அதேபோல லக்னோ ஆவாதி உணவுகளும் எனக்குப் பிடிக்கும்.
மயூர்: நான் சைவம் என்பதால், சிறந்த சைவ உணவுகளை வழங்கும் எந்த மாநிலமும் எனக்குப் பிடிக்கும். அந்த வகையில், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்காளம் ஆகியவை எனது அபிமான மாநிலங்கள். மேற்கு வங்காளத்தில் சைவ உணவுகள் ரொம்ப அருமையாக இருக்கும். அந்த உணவுகளில் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், ‘மோச்சர் பட்டூரி’, கேரளாவில் ‘புட்டு-கடலைக்கறி’, டெல்லியில் ‘சோலே பட்டூரா’.
வெளிநாடுகளிலும் தற்போது சைவ உணவு கிடைப்பது எளிதாகி வருகிறதா?
மயூர்: தற்போது பலரும் சைவத்தை ஆரோக்கியமான உணவுமுறையாகக் கருதி அதற்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள்.
‘சாப்பிட்டுப் பாருங்கள்’ என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் உணவு வகைகள்?
ராக்கி: அசாமிய உணவுகளை நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். அவை அதிகம் அறியப்படாதவை, ருசி உணரப்படாதவை. உலகின் சிறந்த உணவாகவும் தகுதி அங்குள்ள உணவுகளுக்கு இருக் கிறது.
எப்போதும் உங்களுக்குப் பிடித்த உணவு?
ராக்கி: சிக்கன் கறி, பிந்தி, வெங்காயம், மிளகாயுடன் சூடான ரொட்டி.
மயூர்: சாதம், பருப்பு, ஊறுகாய்.
உங்கள் பயணத்தில் அடுத்து…?
ராக்கி: நாங்கள் ஒரு புதிய உணவு நிகழ்ச்சித் தயாரிப்பில் இருக்கிறோம். அது விரைவில் டி.வி.யில் ஒளிபரப்பாகும். அடுத்து நாங்கள் ஆஸ்திரேலியா பறக்கப் போகிறோம்.