விடுதலைப் புலிகள் இருந்தால் இப்படி நடக்குமா; அங்கலாய்க்கும் சிங்கள மக்கள்!

v1 v2 v3 v4

வவுனியாவின் சிங்களப் பிரதேசமான அங்போபுர என்ற இடத்திலுள்ள நூற்றாண்டுகால பழமைவாய்ந்த சுமேரியன் கல்லறையை புதையல் திருடர்கள் அழித்துள்ளதாக அந்தப் பிரதேச மக்கள் கவலையோடு குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்காவின் தொல்பொருள் திணைக்களம் அந்த கல்லறையை பாதுகாக்க தவறிவிட்டதாக தெரிவிக்கும் மக்கள், விடுதலைப் புலிகளே அழிக்காமல் பாதுகாத்த அந்த கல்லறையை தற்போது திருடர்கள் அழித்துவிட்டதாக கவலை வெளியிட்டுள்ளனர். இனிமேலும் எஞ்சியவற்றைப் பாதுகாக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி அந்தப் பகுதி மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

சுமேரியன் கல்லறை 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அங்கு சட்டவிரோதமாக தேக்கு மரங்களை வெட்டும் னடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதோடு அந்தப் பகுதிக்கு கிராம மக்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில சிங்கள மக்கள், ”விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் அவர்கள் இயற்கையை மிகவும் கவனத்தோடு பாதுகாத்தார்கள். கடுமையான சட்டங்கள் பிறப்பித்து இப்படியான சட்டவிரோத  நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தடுத்தார்கள். ஆனால் இன்று திருடர்கள் இயற்கையை அழிப்பதோடு தொல்பொருள் சின்னங்களையும் அழித்துவருகின்றனர்” என்று கவலையோடு தெரிவித்ததாக எமது பிராந்திய ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் பின்னரான காலத்தில் அவர்கள் பற்றிய நல்ல அபிப்பிராயம் சிங்கள மக்களிடையே இம்மாதிரியான சம்பவங்களின்போது அவ்வப்போது எழுகின்றமையும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.