விவசாயிகள் போராடும் முறையில் மாற்றம் வர வேண்டும்: விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி | கோப்புப் படம்

விவசாயிகள் போராடும் முறையில் மாற்றம் வர வேண்டும் என ஆசைப்படுவதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட துயர சம்பவங்களை மையமாக வைத்து ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருக்கிறார் க. ராஜீவ்காந்தி.

இந்த ஆவணப்படத்தின் திரையிடல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நெகிழ்வுடன் பேசினார்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “இந்த ஆவணப் படத்தை இயக்கிய ராஜீவ் காந்திக்கு எனது மரியாதை கலந்த வணக்கம். சீனு சார் பேசியது போல, இந்த ஆவணப்படம் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீட்டிற்குள் சென்று பார்க்க வைத்தது.

இது யாரால் நடக்கிறது, எதனால் நடக்கிறது என நீண்ட நாட்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். நம்ம போராடுவது, போராடும் முறை இதெல்லாம் அவர்களுக்கு பழகிவிட்டது என நினைக்கிறேன். அவர்களுக்கு ஏதோ காலையில் டிபன் சாப்பிடுவது மாதிரி என நினைக்கிறேன்.

லிங்குசாமி சார் கூறியது போல, இந்த ஆவணப்படம் இன்னும் சிறியதாக ஆக்கப்பட்டு இன்னும் நிறைய மக்களிடம் போய் சேர வேண்டும் என நினைக்கிறேன். விவசாயிகள் போராடும் முறையில் மாற்றம் வர வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஏனென்றால் இது இல்லை என்றால் மற்றொன்று என கொடுத்து ஏமாற்றி, நம்மை திசை திருப்பி, ஏமாற்றி ரொம்ப அழகாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை போராடுபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். போராடப்படும் முறையும் மாற வேண்டும்.

ஆட்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் நிலைமை மட்டும் மாறவே இல்லை. அதற்கு போராட்டத்தை வழிநடத்தும் தலைவர்கள் யாராக இருந்தாலும் சரி, அதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் இல்லையென்றால் புதிய முறைகளை சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது, இன்னொருவர் வீட்டில் நடக்கிறது. நம் வீட்டிற்கு வரும் போது பார்த்துக் கொள்வோம் என உட்கார்ந்திருப்பார்கள். தான் வீட்டில் கதவை தட்டும் போது மட்டுமே அய்யோ.. அம்மா என அழுவார்கள். அதுவரைக்கும் பொறுத்திருக்காமல், இன்னொரு கட்டத்துக்கு போக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார் விஜய் சேதுபதி.

50 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் ‘அம்மண அம்மண தேசத்துல..’ என்று தொடங்கும் பாடலை எழுதியிருப்பவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். பாடலுக்கு இசை ஜி.வி.பிரகாஷ். ஆவணப்படத்தில் குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இசையமைப்பாளர் ஜோஹன் இப்படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்த்திக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணனும் ரமேஷ் யுவியும் செய்துள்ளனர். நா.சதக்கத்துல்லா, எஸ்.கவிதா இணைந்து இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர்.