கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில், பொக்கிஷம் நிறைந்துள்ள ரகசிய அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலின் ரகசிய நிலவறைகளை திறக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, இந்த கோவிலில் உள்ள, ஏ முதல் எப் வரை உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் மட்டும் திறக்கப்பட்டன.
அந்த ரகசிய அறைகளில் இருந்து 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொக்கிஷங்கள் மற்றும் நகைகள் கிடைத்துள்ளது. ஆனால், ‘பி’ அறை மட்டும் திறக்கப்படவில்லை.
அந்த ரகசிய அறையை திறக்கக்கூடாது என்றும், அது 100 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை என்றும், ‘பி’ நிலவறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்றும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இதனால், அந்த ரகசிய ‘பி’ அறை மட்டும் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், அந்த ரகசிய அறையை திறக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறப்பு வழக்கறிஞரான கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், மற்றும் நீதிபதி சந்திராசூட் ஆகியோர் முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில் நிர்வாகத்தை உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து கண்காணிக்க முடியாது. எனவே, மூடப்பட்டுள்ள ரகசிய ‘பி’ அறையை திறந்து அதிலிருக்கும் பொக்கிஷங்கள் அனைத்தையும் கணக்கெடுக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தனர்.
மேலும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருடன், சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் ஆலோசனை நடத்தி ‘பி’ ரகசிய அறையை திறந்து அதிலுள்ள நகைகளை எல்லாம் கணக்கிட வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ‘பி’ ரகசிய அறையை திறப்பதற்கு திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், அந்த நிலாவரை திறக்கப்பட்டால் பத்மநாப சுவாமி கோவிலின் புனிதத்தன்மை கெட்டுபோய்விடும் என்றும் எச்சரித்துள்ளனர்.