சரும வகைக்கு ஏற்ப கற்றாழையைப் பயன்படுத்துவது எப்படி?

alo

 

 

 

 

 

 

 

 

 

பொதுவான அழகு பராமரிப்பு பொருள் தான் கற்றாழை ஜெல். இந்த கற்றாழை அனைத்து வகையான சரும மற்றும் தலைமுடி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு அளிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. கற்றாழையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. மேலும் இதில் பாலிசாக்கரைடுகள், லெக்டின்கள், மனன்கள் போன்ற சரும செல்களின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய உட்பொருட்கள் உள்ளன.

சரி, இப்போது சரும வகைக்கு ஏற்ப கற்றாழை ஜெல்லை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

கற்றாழை – எலுமிச்சை மாஸ்க்
இந்த மாஸ்க் வறட்சியான சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லுடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை – ரோஸ் வாட்டர் மாஸ்க்
இந்த மாஸ்க் அதிக வறட்சியைக் கொண்ட சருமத்தினருக்கு ஏற்றது. சிறிது கற்றாழை ஜெல்லுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும்.

கற்றாழை – தேன் மாஸ்க்
இந்த மாஸ்க் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும்.

கற்றாழை – மஞ்சள் – பால் மாஸ்க்
இந்த மாஸ்க் முகப்பருவால் அதிகம் அவஸ்தைப்படுபவர்களுக்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல், மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கற்றாழை – வெள்ளரிக்காய் மாஸ்க்
இந்த மாஸ்க் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது. இவர்கள் கற்றாழை ஜெல்லுடன் சிறிது வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

கற்றாழை – ஓட்ஸ் மாஸ்க்
கற்றாழை ஜெல்லுடன், எலுமிச்சை சாறு மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடு இருக்கும்.

கற்றாழை – வேப்பிலை மாஸ்க்
இந்த மாஸ்க் பொலிவிழந்து இருக்கும் சருமத்தினருக்கு ஏற்றது. அதற்கு சிறிது கற்றாழை ஜெல்லுடன், வேப்பிலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீக்கப்பட்டு, முகம் பொலிவோடு இருக்கும்.