இலங்கை -சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டி இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் அரங்கில் நடைபெறவுள்ளது.
இவ்விரு அணிகளும் மோதும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரையில் நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகள் வீதம் வெற்றிபெற்றுள்ளன.
அதனால் இன்று நடைபெறவுள்ள கடைசி போட்டி இரு அணிகளுக்கும் தீர்மானம் மிக்க போட்டியாக அமைந்துள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் நிலையில் இன்று இரு அணிகளும் களமிறங்குகின்றன.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 4ஆ-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிம்பாப்வே அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
கடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்த திக்வெல்லவும், குணதிலகவும் இப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடிய அவர்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல் ஆடி சிம்பாப்வே பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
16.1 ஓவர்களில் 100 ஓட்டங்களைக் கடந்த இந்த ஜோடி, விக்கெட் இழப்பின்றி 33.4 ஓவர்களில் 200 ஓட்டங்களைக் கடந்தது. திக்வெல்ல 99 பந்துகளில் சதம் விளாசினார்.
சிம்பாப்வே அணிக்கு கடும் சவாலாக விளங்கிய இந்த ஜோடி 209 ஓட்டங்கள் எடுந்திருந்த வேளையில் பிரிந்தது. 101 பந்துகளில் 87 ஓட்டங்களை சேர்த்த குணதிலக, வாலெரின் பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே திக்வெல்லவும் ஆட்டமிழந்தார். 118 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் திக்வெல்ல 116 ஓட்டங்களை சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து கடைசி நேரத்தில் வேகமாக ஓட்டங்களைக் குவிக்கும் முயற்சியில் இலங்கை வீரர்கள் ஈடுபட்டனர்.
மெத்தியூஸ் 42, உபுல் தரங்க 22 ஓட்டங்களை பெற, இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 300 ஓட்டங்களை எடுத்தது.
வெற்றிபெற 301 ஓட்டங்களை எடுக்கவேண்டும் என்ற நிலையில் ஆடவந்த சிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆக்ரோஷமாக ஆடினர்.
இதனால் அந்த அணி 7.4 ஓவர்களிலேயே 50 ஓட்டங்களைக் கடந்தது. சிம்பாப்வே அணியின் ஓட்ட எண்ணிக்கை 67 ஆக இருந்தபோது மசகட்சா (28) ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மிர் 43, முசகண்டா 30 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தனர். சிம்பாப்வே அணி 21 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
மழையால் ஆட்டம் தடைப்பட்டதைத் தொடர்ந்து சிம்பாப்வே அணி வெற்றிபெற 31 ஓவர்களில் 219 ஓட்டங்கள் எடுக்கவேண்டும் என்று டக்வோர்த் லூயிஸ் முறையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கை துரத்தும் முயற்சியில் வில்லியம்ஸ் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிக்கந்தர் ராசா (10) வெளியேறினார். இருப்பினும் கிரேக் இர்வின் பவுண்டரிகளும், சிக்சருமாக விளாசி இலங்கை அணிக்கு பயத்தை காட்டினார். அவரை வீழ்த்த இலங்கை பந்துவீச்சாளர்கள் பெரிதும் முயன்றனர்.
45 பந்துகளில் 50 ஓட்டங்க ளைக் கடந்த இர்வின், 55 பந்துகளில் 69 ஓட்டங்களைக் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார். அவரது சிறப்பான துடுப்பாட்டத்தினால் சிம்பாப்வே அணி 29.2 ஓவர் களில் 6 விக் கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி பெற்றது.