இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து கேட்டுக்கொண்டதன் பேரில் ஜெயராமன் குடும்பத்தினர் பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயிலின் இடது புறத்தில் பாலச்சந்தருக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கினர். அந்த இடத்்தில் பாலச்சந்தருக்கு மார்பளவு வெண்கல சிலை வைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் பாலச்சந்தரின் மனைவி ராஜம், சிலையை திறந்து வைத்தார். இதில் டைரக்டர் மணிரத்னம், வசந்த்சாய், தயாரிப்பாளர் பிரமிட்நடராஜன், பாலச்சந்தரின் குடும்பத்தினர் கந்தசாமி, புஷ்பா கந்தசாமி, கீதா கைலாசம், பிரசன்னா, விஷ்ணுபிரியா பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியபோது கூறியதாவது: –
86 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் பிறந்த பாலச்சந்தர் என்ற மாமனிதர் மாற்று சினிமா தரப்போகிற கலைஞன் என்பதை இந்த மண் அறிந்திருக்காது. இவர் தாதாசாகேப் பால்கே விருது பெற போகின்ற பிள்ளை என்பதை உறவினர்கள் யாரும் அறிந்து இருக்கமாட்டார்கள். கமல், ரஜினி என்கிற 2 பெரும் கலைஞர்களை தமிழ் மண்ணுக்கு தரப்போகிறார் என்பதை கலையுலகம் அறிந்திருக்காது.
கலையாக வந்தவன் இந்த இடத்தில் தான் சிலையாக போகிறான் என காற்று அறிந்திருக்காது. இந்த ஊரே ஒன்று சேர்ந்து பாலச்சந்தர் என்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்துவதை கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். பாலச்சந்தர் என்பவர் ஒரு தனி மனிதர் அல்ல. அவர் ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்தின் மூலம் தமிழ் சமுதாயமும், இளைஞர்களும் கற்று கொள்ள வேண்டிய பாடம் நிறைய உள்ளது.
சினிமாவுக்கு வருவது என்பதும், சினிமாவில் ஜெயிப்பது என்பதும் புல்லில் மேல் நடந்து பூப்பறிப்பது அல்ல. முள்ளில் நடந்து தேர் இழுப்பது. அவ்வளவு சுலபமானது அல்ல. பாலச்சந்தர் திரைப்படத்துக்கு வரும்போது நிறுவனங்கள், நடிகர்களின் ஆதிக்கத்தில் சினிமாத்துறை இருந்தது. நிறுவனங்கள் என்ற கோட்டையை உடைத்து, நடிகர்கள் என்ற பெருஞ்சுவரை தாண்டி, நட்சத்திரத்தின் ஆதிக்கத்தை எல்லாம் தாண்டி இந்த கிராமத்தில் பிறந்த பாலச்சந்தர் புகழ் கொடியை நாட்டியிருக்கிறார்.
சினிமா துறையில் நிலவி வந்த மூடநம்பிக்கையை உடைத்து, தனது முதல் படத்துக்கு நீர்குமிழி என பெயரிட்டார். இந்த பெயர் வைப்பதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும். சினிமா காட்சிகளால் தனது எண்ணங்களை, லட்சியங்களை தீட்டி காட்டியவர். கவிஞர் சொன்னதை சரியாக காட்சிப்படுத்த கூடிய ஒரே கலைஞன். “தண்ணீர், தண்ணீர்” என்ற படத்தில் பஞ்சத்தின் உச்சத்தை காட்டும் வகையில் ஒருவன், விறகுக்காக கோடாரியை எடுத்து கலப்பையை வெட்டி கொண்டிருப்பான்.
கலப்பையும், ஏறு மாடும் எங்கள் கடவுள். அந்த கடவுளையே உடைத்து சாப்பிடுகின்ற சூழ்நிலையை காட்டி பஞ்சத்தின் உச்சத்தையே காட்சியாக அமைத்திருப்பார். பாலச்சந்தரிடம் பாட்டு எழுதுவது என்பது மிக கடினமானது. ஒருவரின் உச்சபட்ச திறமையை வெளிக்கொண்டு வரக்கூடிய ஆற்றல்மிக்கவர். பாலச்சந்தர் ஒரு மகாகலைஞன். அவர் இல்லையென்றால் ஒரு புதிய தலைமுறை தோன்றியிருக்காது. பாலச்சந்தர் படங்களில் வெற்றி படங்கள், தோல்வி படங்கள் என்பது இல்லை.
புரிந்து கொள்ளப்பட்ட படங்கள், புரிந்து கொள்ளாத படங்கள் என்று தான் உள்ளன. இந்த மண்ணில் சின்ன முணு முணுப்பு உள்ளது. அது இந்த ஊருக்கு பாலச்சந்தர் என்ன செய்தார்? என்பது. இந்த கேள்வி என் காதில் லேசாக விழுந்தது. அதற்கு நான் அவசியம் பதில் கூற வேண்டும். கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல. உங்கள் வார்டு கவுன்சிலர் அல்ல. அரசியல்வாதி அல்ல. நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்க கூடியவர் என்பது தான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.