இலங்கையில் டெங்கு நோய் வேகமாகப் பரவிவருவதால் சுற்றுலாத்துறையும் ஆட்டம்காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கடந்துள்ள ஏழு மாதங்களில் மாத்திரம் 80 ஆயிரத்து 732 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 250இற்கும் மேற்பட்டோர் பலியாயுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இவ்விடம் சம்பந்தமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளதுடன், தமது நாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு பயண அறிவுறுத்தல்களையும், எச்சரிக்கையையும் விடுத்துள்ளன.
டெங்கு நோய் பரவிவருவதால் விழிப்பாக இருக்குமாறும், காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்றும் இலங்கைக்கு சுற்றுலா வரும் வந்துள்ள தமது நாட்டுப் பிரஜைகளுக்கு விரிவாக ஆலோசனை வழங்கியுள்ளது பிரிட்டன் அரசு.
அத்துடன், டெங்கு அச்சுறுத்தல் குறித்து வெளிநாட்டு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டுவருவதால் இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கையில் இனிவரும் நாட்களில் வீழ்ச்சி ஏற்படும் அபாயமிருக்கின்றது என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, குப்பைப் பிரச்சினையை முகாமைசெய்து, டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனை முன்வைக்கின்றனர்.
பயண அறிவுறுத்ததால் சுற்றுலாத்துறையில் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் அதை சீர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை சுற்றுலா அதிகாரசபை அறிவித்துள்ளது.
டெங்கு நோயால் கொழும்பு மாவட்டத்தில் 18 ஆயிரத்து 186 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 121 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 589 பேரும் என மேல்மாகாணத்தில் மட்டும் 34 ஆயிரத்து 896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் 8 ஆயிரத்து 709 பேரும், காலி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 95 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 312 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர பதுளை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் நோய் வேகமாகப் பரவிவருகின்றது.
அதேவேளை, நீர்கொழும்பு வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட நாட்டிலுள்ள பிரதான வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நிரம்பிவழிகின்றனர். இதனால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தனிப் பிரிவொன்று அமைக்கப்படவுள்ளது. அத்துடன், ஏனைய வைத்தியசாலைகளிலும் மாற்று ஏற்பாடுகள் செய்வது பற்றி சுகாதார அமைச்சு தீவிரமாக பரீசீலித்துவருகின்றது.
இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறு மக்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆரம்பத்திலேயே உரிய மருத்துவ ஆலோசனையைப் பெறாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.