2019இல் ஜனாதிபதித் தேர்தல்?

அரசமைப்புத் திட்டத்தின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டில் நடைபெறவேண்டும் என்பது  நிச்சயமாகியுள்ளது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அரசமைப்புத் திட்டத்தின் 7ஆவது பிரிவின் 30 (1)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் உத்தியோகபூர்வ காலம் ஐந்து வருடங்களாகும். அதன் 31 (3)ஆம் ஷரத்தின்படி ஜனாதிபதியொருவரின் பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒருமாத காலத்துக்குக் குறையாததும் இரண்டு மாத காலத்துக்கு மேற்படாததுமான கால எல்லைக்குள் புதிய தேர்தல் நடத்தப்படவேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி 2015 ஜனவரி 8ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்தார். அதன்படி அவரது ஐந்து வருடப் பதவிக்காலம் 2020 ஜனவரி 8இல் முடிவடைகிறது. அதனால் அடுத்த தேர்தல் 2019 நவம்பர் 8இற்கும் டிசம்பர் 8இற்கும் இடையில் நடைபெறவேண்டும். எனவே, 2020 வரை ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது என அரசு பகிரங்கமாகக் கூறிவருவது அரசமைப்புக்கு முரணானது.
அதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டு வருகின்றது.
பொது எதிரணியான மஹிந்த அணி  சார்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ களமிறங்குவார் என பரவலாகப் பேசப்பட்டு வந்தாலும், அரசியலில் இறங்கும் உத்தேசம் தனக்கு இல்லையென அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.