கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி

கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் முந்திரி

அமேசான் காடுகளில் இருந்து போர்ச்சுக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்ட முந்திரிப் பருப்பில், ஆற்றல், ஆன்டிஆக்சிடென்ட், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.

சத்துக்கள்  பலன்கள்: மிக அதிக அளவில் ஆற்றலை அளிக்கக்கூடியது. 100 கிராம் முந்திரியைச் சாப்பிட்டால், 553 கலோரி கிடைத்துவிடும். மேலும் இதில், கரையக்கூடிய நார்ச்சத்தும் உள்ளது. இதயத்துக்கு ஆரோக்கியமான முந்திரியில், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளதால், கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

இதனால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. முந்திரியில் மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், துத்தநாகம் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன. இதில் வைட்டமின் பி5, பி6, ரிபோஃபிளேவின், தயாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துக்கள் நிறைவாக உள்ளன.

அதிலும் குறிப்பாக 100 கிராம் முந்திரியில் 0.147 மி.கி அளவுக்கு வைட்டமின் பி6 உள்ளது. இது ஒரு நாள் தேவையில் 32 சதவிகிதம். இது ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய அனீமியா உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.

இதில் உள்ள ஒரு வகையான ஃபிளவனாய்ட் கண்களைப் பாதுகாப்பதுடன், புறஊதாக் கதிர்வீச்சில் இருந்து சருமத்தைக் காத்து மிக விரைவில் முதுமை தோற்றம் ஏற்படு்வதைத் தடுக்கிறது.

தேவை: ஒரு நாளைக்கு 3  முந்திரி பருப்பைச் சாப்பிட்டுவந்தால் (எண்ணெயில் வறுக்காமல், பச்சையாக) பல்வேறு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் வராமலே தடுக்க முடியும். இதய நோயாளிகள் முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.