தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து பெண் குழந்தை கொலை… பின்ணனியில் நடந்தது என்ன?

வத்தலக்குண்டு அருகே 2 வயது பெண் குழந்தையை பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி. அந்த பகுதியில் உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அவரின் மனைவி நாகராணி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 2-வது பெண் குழந்தை பெயர் நேசிகா. இரண்டு வயதாகும் நேசிகா இவர்களுக்கு செல்லமான குழந்தை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகராணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

எனவே அவர் தனது தாய் ஊரான வத்தலக்குண்டு அருகே உள்ள தேவரப்பன்பட்டி மீனாட்சிபுரத்துக்கு 2 குழந்தைகளுடன் வந்தார்.

நேற்று இரவு குழந்தை நேசிகா அந்த பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த நிலையில் திடீரென மாயமானாள்.

அதிர்ச்சியடைந்த நாகராணி தனது மகள் நேசிகாவை உறவினர் வீடுகளில் தீவிரமாக தேடிப்பார்த்தார்.
காணாமல் போன குழந்தையை தேடினர்

எங்கு தேடியும் கிடைக்காததால் தனது கணவர் பால்பாண்டிக்கு தகவல் கொடுத்தார். பதறிப் போன அவர் உடனடியாக மீனாட்சிபுரம் வந்துள்ளார். உடனே 2 பேரும் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீடுகளில் தேடினர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால் பட்டி வீரன்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர்.

போலீசும் தேடியது
உடனடியாக விரைந்து வந்த போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது நாகராணி வீட்டுக்கு அருகே, உறவினரான முத்துப்பாண்டி என்பவரின் வீட்டிலும் போலீசார் தேடினர்.

மூழ்கிய நிலையில் நேசிகா
அந்த வீட்டில் மாடியில் போலீசார் ஏறிப்பார்த்தனர். அப்போது அங்குள்ள பிளாஸ்டிக் பேரலில் குழந்தை நேசிகா பிணமாக கிடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த கணவன்- மனைவி கதறி துடித்தனர். இந்த குழந்தையை யாரோ தண்ணீரில் அமுக்கி கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

கதறல்
பெற்றோர் கதறல் இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த போலீஸ் எஸ்பி சக்திவேல் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் என்ன
பட்டிவீரன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாயார் நாகராணி மற்றும் அருகில் உள்ள உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 2 வயது குழந்தையை ஏன் கொன்றார்கள் என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.