பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஊழல் மோசடி, நிதி மோசடி மற்றும் கொலை செய்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதுடன் மக்களுக்கு வழங்கிய வாக்குறிதிகளின் பிராகாரம் அவ்வாறானவர்களுக்கு தண்டனையும் வழங்க வேண்டும்.
பொலிஸ் மற்றும் அரசியல் என பல துறைகளில் உள்ளவர்கள் மஹிந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். இதனை நாம் நன்கு அறிவோம். அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காணாமல்போனோர் தொடர்பான சட்டவரைபு குறித்து கருத்து தெரிவித்த பொன்சேகா, “போர்க்காலத்தில் இனமத பேதங்களையும் தாண்டி அதிகமானவர்கள் காணாமல் போயிருந்தனர். படையினரும் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயிருந்தனர். அவர்களை கண்டறிவதற்காகவே இந்த சட்ட வரைபு. படையினரை தண்டிப்பதற்காக அல்ல. வெள்ளை வான்களில் கடத்தல்களில் ஈடுபட்ட கோட்டாபயவை சேர்ந்தவர்களுக்கே இதனால் அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.