மன்னாரில் மலேரியா நுளம்பை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ‘அபேற்’ எனப்படும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்படி கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மன்னாரில் டெங்கு மற்றும் மலேரியா நுளம்பின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த கிணறுகளினுள் போடப்படும் ‘அபேற்’ எனும் இரசாயன கலவையினால் நிலத்தடி நீர் மாசடையும் எனவும் குறித்த நடவடிக்கையை நிறுத்துமாறு கோரியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்தித்த மன்னார் மாவட்ட மலேரியா நோய்த்தடுப்பு இயக்க வைத்திய அதிகாரி வைத்தியர் அரவிந்தன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், ‘குறித்த இரசாயன கலவையானது உலக சுகாதார ஸ்தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொன்றாகும். சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பாவிக்கப்படுகின்றது. இதனால் சிறுநீரக பாதிப்பு மற்றும் தொற்று நோய்கள் ஏற்படாது என கண்டறியப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.