கடற்படையின் முன்னாள் பேச்சாளர் தசநாயக்க கைது?

dkp-dassanayake1_06092016_kaa_cmy

 

 

 

 

 

 

 

 

 

 

 

இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கப்டன் டி.கே.பி. தசநாயக்க கைது செய்யப்படவுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினர் கப்டன் தசநாயக்கவை கைது செய்யவுள்ளதாக நேற்றைய தினம் கொழும்பு கோட்டே நீதிமன்றிற்கு அறிவித்துள்னளர்.

வெள்ளவத்தையில் ஐந்து இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் உள்ளிட்ட கடந்த காலங்களில் இடம்பெற்ற சில கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் இவ்வாறு கடற்படையின் முன்னாள் பேச்சாளர் கைது செய்யப்படவுள்ளார்.

இந்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் ஆறு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு கொழும்பு கோட்டே நீதிமன்றில் நீதவான் லங்கா ஜயரட்ன எதிரில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைகளின் போது கப்டன் தசநாயக்கவை கைது செய்யவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

விசாரணைகளுக்காக கடந்த 10ம் திகதி புலனாய்வுப் பிரிவிற்கு சமுகமளிக்குமாறு கப்டன் தசாநாயக்கவிற்கு அறிவித்த போதிலும் அவர் விசாரணைகளில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கப்டன் தசநாயக்க ஓர் பிரதான சந்தேக நபராக தென்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதியின்றி புலனாய்வுப் பிரிவினர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டு வருவதாக , தசாநாயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் சந்தேக நபர் என தென்பட்டால் அவரை கைது செய்ய முடியும் எனவும் அதற்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அனுமதியளிக்கும் எனவும் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட உள்ள கப்டன் தசாநாயக்க தற்போது மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.