வரி அறவீடு செய்யும் அதிகாரம் மாகாணசபைக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றின் அனுமதியின்றி வரி அறவீடு செய்யும் அதிகாரம் எந்தவொரு மாகாணசபைக்கும் கிடையாது.
அரசியல் அமைப்பின் 148ஆம் சரத்தின் அடிப்படையில் வரி அறவீடு செய்யும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு மட்டுமே காணப்படுகின்றது.
நாடாளுமன்றின் அனுமதியின்றி ஏதேனும் ஓர் நிறுவனம் வரி அறவீடு செய்ய முயற்சித்தால் அது சட்டவிரோதமான செயலாகும். மாகாணசபைகளுக்கும் நகரசபைகளுக்கும் நாடாளுமன்றினால் வழங்கப்பட்ட அதிகாரங்களே காணப்படுகின்றன.
பொதுமக்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து டெங்குவை ஒழிக்க முடியாது எனவும் இதனை எதிர்ப்பதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அபிவிருத்தி செய்யப்படாத, கவனிப்பாராற்று கிடக்கும் மேல் மாகாண காணிகளுக்கு அதன் மொத்த பெறுமதியில் 2 வீதம் வரி அறவீடு செய்யும் மேல் மாகாணசபையின் யோசனைக்கு அவர் இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.