யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் படுகொலை தொடர்பான பொலிஸ் விசாரணை பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் என்பதில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனமான உள்ளதென ஆணைக்குழுவின் யாழ். அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
துன்னாலை பகுதிக்கு விஜயம் செய்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், கொலையுண்ட இளைஞனின் குடும்பத்தாரிடம் தகவல்களை கேட்டறிந்ததோடு, பொலிஸ் நிலையத்திற்கும் சென்று தகவல்களை திரட்டியுள்ளனர்.
குறித்த தகவல்கள் தொடர்பான அறிக்கை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை காரியாலயத்திற்கு அனுப்பப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.
பருத்தித்துறை மணற்காட்டு பிரதேசத்தில் நேற்று முன்தினம் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யோசராசா தினேஸ் (வயது-24) என்ற இளைஞனின் இறுதிக்கிரியை, பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று துன்னாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது