யாழ். பருத்தித்துறை துன்னாலை இளைஞனின் கொலை, ஒரு திட்டமிட்ட செயலென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இளைஞனின் மார்புப் பகுதியிலேயே குண்டு பாய்ந்துள்ளதெனவும், அதனால் ஏற்பட்ட அதிக இரத்தப் பெருக்கே மரணத்திற்கு காரணம் எனவும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொலிஸார் குறிப்பிட்டதைப் போன்று தப்பிச் சென்ற லொறியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்குமாயின் அவ்வாறு மார்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு படும் வாய்ப்புக்கள் மிகவும் அரிதானதென தெரிவிக்கப்படும் நிலையில், இதில் ஏதேனும் சதி இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பிலிருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டுள்ளதோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணை நடத்தி வருகின்றது.
யாழ். மணற்காட்டு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கொலையுண்ட குறித்த இளைஞனின் இறுதிக் கிரியை, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நேற்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.