ஒருவரின் உடல்நலத்தை மேம்படுத்தும் அம்சமாகதிருமணம் உள்ளது என்று கண்டறிந்த ஆய்வாளர்கள், உடலில் அதிக அளவு கொழுப்பு போன்ற முக்கிய இதய நோய் ஆபத்து காரணிகளால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், திருமணத்தால் அவரின் ஆயுள் அதிகரிப்பு சாத்தியப்படலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இதய நலன் தொடர்பான மாநாடொன்றில், பிரிட்டனை சேர்ந்த ஏறக்குறைய 1 மில்லியன் வயது வந்தோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, நம் உடல் நலனை நாம் சிறப்பாக கவனித்துக் கொள்வதற்கு ஒரு அன்பான துணை தூண்டுகோலாக இருப்பார் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைவரும் உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு அல்லது நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
இந்த ஆய்வில் திருமணமானவர்களின் உடல்நலன் திருமணமாகாமல் தனியாக இருப்பவர்களை விட மேம்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
மருத்துவர் பால் கார்ட்டர் மற்றும் அஷ்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்த அவரின் சகபணியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். மாரடைப்பிலிருந்து தப்பித்து உயிர் வாழ்வதற்கும், திருமணத்திற்கும் தொடர்பு இருப்பது இவர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரிட்டனின் இதயநாள நலன் அமைப்பின் மாநாட்டில் ஆய்வாளர்களின் அண்மைய ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது.
‘நம் உடல் நலனை பேணுவதற்கு அன்பான துணை வேண்டும்’
கொழுப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பெரும் இதய நோய் காரணிகளுக்கு எதிராக உடலநலனை தாங்கும் சக்தியாக திருமணம் உதவுவதாக ஆய்வாளர்கள் தங்களின் ஆய்வில் சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதய நோய் உள்ளிட்ட அனைத்து காரணங்களினால் ஏற்படும் மரணம் குறித்து இந்த ஆய்வில் அலசப்பட்டது.
அஷ்டன் மருத்துவ கல்லூரியை சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட 14 ஆண்டு ஏசிஏஎல்எம் ஆய்வில், உடலில் அதிக கொழுப்பு இருந்த 50, 60 மற்றும் 70 வயதான ஆண் மற்றும் பெண்களில் தனியாக வாழ்பவர்களை விட திருமணமானவர்கள் அதிக காலம் உயிர் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதே போல், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களிலும் திருமணமானவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.
ஆனால், கூடி வாழ்பவர்கள், விவகாரத்தானவர்கள், திருமண பந்தத்திலிருந்து பிரிந்தவர்கள் அல்லது துணையை இழந்தவர்களுக்கு உடல் நலன் எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இந்த ஆய்வில் கிடைக்கவில்லை.
அதே போல், திருமணமானவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று தங்கள் ஆய்வில் சோதித்து ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.
அனைவரும் திருமணம் செய்து கொள்ள பரிந்துரைக்கிறதா ஆய்வு?
தங்களின் ஆய்வு கண்டுபிடிப்பு குறித்து மருத்துவர் கார்ட்டர் கூறுகையில், ”இது குறித்த அடிப்படை காரணங்களை மேலும் அறியவேண்டும். இதய நோயுள்ளவர்கள் மட்டுமல்லாமல் இதய நோய் தொடர்பான ஆபத்து காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருமணம் என்ற அம்சம் உடல்நலன் தொடர்பாக பாதுகாப்பாக உள்ளது” என்று தெரிவித்தார்.
”அதற்காக அனைவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை” என்று மேலும் தெரிவித்த கார்ட்டர், மேலும் குறிப்பிடுகையில், ”திருமணத்தால் உண்டாகும் ஆதாயங்களை நாம் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதே போன்று நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூக ஆதரவுதளங்களையும் நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்துக்கு நன்மை விளைவிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்” என்று மேலும் தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனை சேர்ந்த மருத்துவர் மைக் நாப்டன் கூறுகையில், ”இதனால் இறுதியாக நமக்கு கிடைக்கும் செய்தி என்னவென்றால், நமது சமூக தொடர்புகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற ஆயுளுக்கும், உடலுக்கும் ஆபத்து விளைவிக்கும் காரணிகள் நமது உடல்நலன் மற்றும் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணிகள்” என்று தெரிவித்தார்.
”நீங்கள் திருமணமானவரோ அல்லது திருமணமாகாதவரோ, இதய நோய் உண்டாக்கும் ஏதாவது ஆபத்துக்கள் உங்கள் உடலில் இருந்தால், அதனை சமாளிக்க உங்களிடம் மிகவும் அன்பாக இருப்பவரை நீங்கள் நாடலாம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.