2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் 1,43,902 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைச் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையகத்தின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் மேலதிக விவரங்கள் வருமாறு:-
கொழும்பு மாவட்டத்திலேயே இத்தகைய பதிவுகள் அதிகமாக செய்யப்பட்டுள்ளன. இங்கு 27,064 பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 22,593 பதிவுகளும், களுத்துறையில் 8,263 பதிவுகளும், யாழ்ப்பாணத்தில் 5,697 பதிவுகளும், வன்னியில் 3,748 பதிவுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பதிவுகள் அனைத்தும் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படும் – என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016இல் நாடெங்கும் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். 2015இல் 16,40,946 ஆகவிருந்த கொழும்பு மாவட்ட வாக்காளர்கள் 2016இல் 16,49,716 ஆகவும், 2015இல் 16,81,887 ஆகவிருந்த கம்பஹா மாவட்ட வாக்காளர்கள் 2016இல் 17,05,310 ஆகவும், வன்னி மாவட்டத்தில் 2015இல் 2,63,201ஆகவிருந்த வாக்காளர்கள் 2016இல் 2,69,110 ஆகவும் அதிகரித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில 2016ஆம் ஆண்டில் 5,48,070 வாக்காளர்கள் பதியப்பட்டுள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.