சுதந்திர கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி வரவேண்டுமாறு தாக்கல் செய்யப்படட மனு மீதான தீர்ப்பு ஓகஸ்ட் 3இல்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவேண்டுமெனக் கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்றுக்கொள்வதா அல்லது நிராகரிப்பதா என்பதைப் பற்றிய தீர்ப்பு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அறிவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பொரலஸ்கமுவ நகர சபையின் முன்னாள் தலைவர் அநுர பிரியசாந்த உட்பட இருவர் தாக்கல்செய்திருக்கும் இந்த வழக்கில் பிரதிவாதிகளாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் செயலாளர் அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டதிட்டங்களின்படி கட்சியின் தலைமைப்பதவிக்கு அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரே நியமிக்கப்படவேண்டும் என்றும், அதன்பிரகாரம் மைத்திரிபால சிறிசேனவுக்கு அப்பதவியை வழங்கமுடியாது எனவும் மனுதாரர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளார்கள்.