காணி, பொலிஸ் அதிகாரங்களுக்கு மேலதிகமாக தமிழர்களுக்கு நிதி, சட்டவாக்க அதிகாரங்கள்!

3Biq79o-295x194

வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்களுடன் சேர்த்து நிதி, சட்டவாக்க அதிகாரங்களையும் அரசு மேலதிகமாக வழங்கவுள்ளது என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

சர்வதேச நிகழ்ச்சி நிரலில் நடக்கும் இந்தத் தேசவிரோத அரசமைப்பால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசமைப்புக்கு எதிராக இன்று பௌத்த பீடங்கள் களமிறங்கியுள்ளன. பௌத்த தேரர்கள் எல்லாவற்றையும் எதிர்ப்பவர்கள் அல்லர். பாரதூரமான விடயங்களை மாத்திரமே எதிர்ப்பர்.

அந்த அடிப்படையில்தான் இந்தத் தேசவிரோத அரசமைப்பை அவர்கள் எதிர்க்கின்றனர். இதன்மூலம் அரசமைப்பின் ஆபத்தை உணரமுடிகிறது.

13வது திருத்தச் சட்டத்தில் மாகாண சபைகளுக்குக் காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ள போதிலும் இந்த நாட்டை ஆட்சி செய்ய ஆட்சியாளர்களான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவோ, பிரேமதாஸாவோ, சந்திரிகாவோ, மஹிந்தவோ அந்த அதிகாரங்களை வழங்கவில்லை. ஆனால், ரணில்தான் அதை வடக்கு, கிழக்குக்குக் கொடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளார்.

இந்த அதிகாரங்கள் மாத்திரமன்றி, அவற்றுடன் சேர்த்து இன்னும் பல அதிகாரங்கள் கொடுக்கப்படவுள்ளன.

அவற்றுள் முக்கியமாக தனியாகச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரமும், நிதி அதிகாரமும் வழங்கப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்டே இந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கப்படும்.

நாட்டை இரண்டாகப் பிரித்து அதில் ஒரு பகுதியை வடக்கு, கிழக்குத் தமிழர்களுக்கான தனிநாடாக உருவாக்கும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் இது நடக்கின்றது. இந்த நிகழ்ச்சி நிரலை இலகுபடுத்துவதற்காகவே புதிய அரசமைப்பு கொண்டு வரப்படவுள்ளது.

இந்தத் தேசவிரோத அரசமைப்பைத் தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். மக்கள் போராட்டத்தின் ஊடாக அரசின் இந்தச் சதியை நாம் முறியடிப்போம்.

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்த நாட்டை மீண்டும் பயங்கரவாதிகளிடம் ஒப்படைப்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.