சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவுக்கு சிறையில் மேலதிக வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபா தகவல் வெளியிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சோதனை நடத்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபா, அது தொடர்பில் கர்நாடக சிறைத்துறை பொலிஸ் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேற்படி தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில், பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து அங்கு சோதனை மேற்கொண்டதாகவும் அதன்போது சிறையிலுள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று போதைப்பொருள் விநியோகிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் ரூபா தெரிவித்துள்ளார்.
அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இத்தகைய வசதிகளுக்காக 2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறையில் ஆய்வு செய்தமைக்கு எதிராக தனக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் ரூபா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரூபா பதவி ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.