தென் ஆப்பிரிக்காவிடம் சுருண்டது இலங்கை: தொடர்ச்சியாக ஆறு தோல்விகள்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.

டான்டன் கவுண்டி மைதானத்தில் நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மகளிர் அணித்தலைவி இனோக்கா ரணவீர முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

இதன்படி முதலில் களமிறங்கி விளையாடிய இலங்கை அணி 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 101 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

 

இலங்கை தரப்பில், அதிகபட்சமாக சாமரி பொல்கம்பொல மற்றும் திலானி மனோதரா ஆகியோர் தலா 25 ஓட்டங்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியில் அணித்தலைவி டேன் வேன் நியெக்கெர்க் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார்.

102 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பரிக்கா அணி, 23.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

 

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லோரா வோல்ட்வார்ட் ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் மிக்னோன் டி பீரிஸ் 38 ஓட்டங்களையும் எடுத்தனர்.

மகளிர் உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி பெற்றுக்கொண்ட ஆறாவது தொடர் தோல்வி இதுவாகும்.