மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசியலமைப்பை ஜனாதிபதி நிறைவேற்றியாக வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் காணாமல் ஆக்கப்படுவதை குற்றவியல் குற்றமாக கருதவேண்டும் எனவும் அக்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஜே.வி.பியின் பிரச்சார செயலாளரான விஜித ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,
அராஜக ஆட்சிக்கு முடிவுகட்ட ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவார் என உறுதி வழங்கிவிட்டே பொதுவேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.
இதற்காக புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் எனவும் அவர் கூறினார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு குறித்தும் அவரால் பல தடவைகள் உறுதிமொழி வழங்கப்பட்டன.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம்.
எனவே, அன்று அப்படியொரு வாக்குறுதியை வழங்கிவிட்டு இன்று இழுத்தடிப்பு இருட்டடிப்பு செய்வது ஏற்புடையதல்ல. மக்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றியே ஆகவேண்டும்
காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து ஆட்களை பாதுகாப்பது குறித்த சர்வதேச சமவாய சட்டமூலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜித ஹேரத் எம்.பி,
எதிர்காலத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்படுதல் தடுத்து நிறுத்தப்படவேண்டும். காணாமல் ஆக்கப்படுவதைக் குற்றவியல் குற்றமாக அறிவிக்கும் வகையிலேயே குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.
அது அவசியமானதொன்றாகும். குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜே.வி.பி இருக்கின்றது என்று குறிப்பிட்டார்.
அதேவேளை, முன்னாள் திருடர்களையும், தற்போதைய திருடர்களையும் அரசு பாதுகாத்து வருகின்றது எனவும் அவர் சாடினார்.