அரசியலினால் எதனையும் சாதிக்கலாம் என்கின்ற காலம் மாறி அறிவு ரீதியாக நாங்கள் மற்றவர்களை விழிப்பூட்டக் கூடிய பதிலளிக்கக் கூடியதொரு தேவைப்பாடிருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கு போட்டோக் கொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அந்த வகையில், ஆண் பிள்ளைகள் கல்வி விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதொரு தேவைப்பாடிருக்கின்றது.
ஆண் பிள்ளைகளினுடைய கல்வித் தரம் மற்றும் அந்த பிள்ளைகளினுடைய கல்வி வளமென்பது பொதுவாக முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தமட்டில் ஒரு கேள்விக்குறியாக மாறி வருகின்ற கால கட்டத்தில் இவ்வாறானதொரு ஆண் மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கின்ற பாடசாலை நிகழ்வில் கலந்து கொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆண் பிள்ளைகள் எதிர்காலத்தில் எமது சமூகத்தினுடைய பொறுப்புக்களை தங்களது தோல்களில் சுமந்தவர்களாக நம் சமூகத்தினுடைய விடிவுக்காகப் போராடக் காத்திருக்கின்றவர்கள்.
அவர்கள் அரசியல் ரீதியாக என்பதற்குப் பதிலாக அறிவு ரீதியாகப் போராட வேண்டியதொரு சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
நாட்டிலே இப்பொழுதிருக்கின்ற சூழல் என்பது முஸ்லிம்களை இந்த நாட்டில் அவர்கள் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து வந்தார்கள் என்பதைக் கூட கேள்விக்கு உட்படுத்தப்படுகின்றதொரு நிலையில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் சிதறி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் பல பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றவர்கள்.
எங்களது மத விடயங்களைச் கொச்சைப்படுத்துகின்ற மத அனுஸ்தானங்களை செய்கின்ற மதஸ்தலங்களை உடைக்கின்றதொரு மிகப்பெரும் பயங்கரமானதொரு கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இவைகளை நாங்கள் வெல்ல வேண்டுமாக இருந்தால், அறிவுமிக்கதொரு சமூகத்தினை உருவாக்க வேண்டியதொரு பொறுப்பு எமக்கிருக்கின்றது.
அரசியலினால் எதனையும் சாதிக்கலாமென்கின்ற காலம் மாறி அறிவு ரீதியாக நாங்கள் மற்றவர்களை விழிப்பூட்டக் கூடிய பதிலளிக்கக் கூடியதொரு தேவைப்பாடிருக்கின்றது.
இந்த நிலையில், ஆண் பிள்ளைகள் கல்வி விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதொரு தேவைப்பாடிருக்கின்றது.
எந்தவொரு பெறுபேற்றினை எடுத்துக் கொண்டாலும், அதில் ஐம்பது வீதத்திற்கும் கூடுதலான பெறுபேறுகளை பெண் பிள்ளைகள் பெறுகின்றனர். மிகவும் குறைந்த நிலையிலேயே ஆண் மாணவர்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.
எம் சமூகத்தினைப் பொறுத்த மட்டில் எந்தவொரு விடயத்தினை எடுத்துக் கொண்டாலும், பொதுவாக கல்வி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாவற்றையும் அரசியலுக்குள் போட்டுக்கொண்டு குழப்பிக் கொள்ளுகின்றதொரு சமூகமாகவே நாங்கள் மாறியிருக்கின்றோம்.
எம் முஸ்லிம் சமூகம் மாத்திரம் தங்களுடைய அரசியல் பிழைப்புக்காக நம் சமூகத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி பிளவுகளை உண்டு பண்ணுகின்றதொரு விடயத்தினை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு எம் சமூகத்தினுடைய வளர்ச்சியில் அவைகள் தாக்கம் செலுத்தக் கூடாதென்பதே எங்களுடைய விருப்பங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. அரசியல் என்பது நிரந்தரமானதல்ல என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் குறிப்பிட்டுள்ளார்.