பொலித்தீன் மீதான தடை முகத்தின் மீதான கோபத்துக்கு மூக்கை வெட்டிய கதை !

உலக நாடுகளில் அன்றாடப் பாவனைப்பொருட்களில் முக்கிய இடமொன்றைப் பெற்றிருக்கும் பொலித்தீனை தடைசெய்வது இந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று பொலித்தீன் உற்பத்தியாளர்களும், விற்பனையாளர்களும், மீள்சுழற்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.
மாற்றுவழி எதையும் கூறாமல் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதிமுதல் பொலித்தீன், லஞ்ச் ஷீட்,  ஷொப்பிங் பேக் மற்றும் ரெஜிபோம் தயாரிப்புக்கு அரசு தடைவிதிப்பது தங்களை ஒரேயடியாக நட்டாற்றில் தள்ளிவிடுவதற்கு சமன் என அவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மக்கிப் போகக்கூடிய பொலித்தீன் தயாரிப்பு, மக்காதவற்றை மீள்சுழற்சி செய்தல் போன்ற ஆக்கபூர்வமான வழிமுறைகளை விட்டுவிட்டு ஒரேயடியாக அவற்றுக்குத் தடைவிதிப்பது பல பிரச்சினைகளை உருவாக்கும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தத் தடையால் ஹோட்டல்கள், உணவுப்பொருட்கள் தயாரிப்பாளர்கள், மொத்த  சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் உட்பட சகல தரப்பினரும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் எனவும், இந்த அதிரடித் தடை ‘முகத்தின் மீதான கோபத்துக்கு மூக்கை வெட்டிய கதை’ போல உள்ளது எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.