இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே வீரர் எர்வின் அசத்தல் சதம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வே வீரர் எர்வின் அசத்தல் சதம்

ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 3-2 என கைப்பற்றி சரித்திர சாதனைப் படைத்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று கொழும்பில் தொடங்கியது. இலங்கை அணி சண்டிமல் தலைமையில் களம் இறங்கியது. ஜிம்பாப்வே அணி கிரிமர் தலைமையில் களம் இறங்கியது.

ஜிம்பாப்வே அணி கேப்டன் கிரிமர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் மசகட்சா, ரெகிஸ் சகப்வா தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சகப்வா 12 ரன்னிலும், மசகட்சா 19 ரன்னிலும், அடுத்து வந்த அறிமுக வீரர் முசகண்டா 6 ரன்னிலும் வெளியேறினார்கள். இதனால் ஜிம்பாப்வே அணி 38 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

4-வது வீரராக களம் இறங்கிய எர்வின் சிறப்பாக விளையாடினார். ஹெராத், லக்மல் ஆகியோரின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டார். வில்லியம் (22), சிகந்தர் ரசா (36), மூர் (19) ஆகியோர் ஒத்துழைப்புக் கொடுக்க எர்வின் 60-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து, தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 146 பந்தில் 9 பவுண்டரி், 1 சிக்சருடன் சதம் அடித்தார். இவர் ஏற்கனவே நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்திருந்தார்.

எதிர்முனையில் விளையாடிய வாலர், 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஜிம்பாப்வே 64 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்துள்ளது. அப்போது எர்வின் 108 ரன்னுடனும், கிரிமர் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.