கிழக்கு ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தலைவர் அபு சயிட் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், அபு சயிட்டின் உயிரிழப்பு தொடர்பில் ஐ.எஸ் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள் மேன்மேலும் தங்களது அமைப்பை விஸ்தரிப்பதை தடுக்கும் பொருட்டே குறித்த திடீர் சோதனை நடத்தப்பட்டதாக இது குறித்து கருத்து தெரிவித்த பென்டகன் தெரிவித்துள்ளது.
இதே வேளை, ஆப்கானிஸ்தான் ஐ.எஸ் அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்த அப்துல் ஹசீப், கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.