அர்ஜுனவின் கோரிக்கையினால் கொதிக்தெழுந்த இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள்!

deg-720x450

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்கவின் கோரிக்கையினால் இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் சீற்றமடைந்துள்ளனர்.

கடந்த 2011ஆம் ஆண்டு, இந்தியாவில் உள்ள மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வியடைந்தது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என அர்ஜுன ரணதுங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் இப்போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டிருப்பதால் இந்திய வீரர்களான கௌதம் கம்பீர், ஆசிஷ் நெஹரா ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளனர்.

இது குறித்து கௌதம் கம்பீர் கூறுகையில், ‘ரணதுங்க போன்ற சிறந்த வீரர்கள் இது போன்று பேசுவது ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. இதைப் பற்றி பேசுவதற்கு முன்னர், அதற்கான ஆதாரங்களை வைத்துக் கொண்டு பேசுவது நல்லது’ என கூறினார்.

மேலும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஆசிஷ் நெஹரா கூறுகையில், ‘ரணதுங்க இப்படி கூறியிருப்பதை நான் விமர்ச்சிக்க விரும்பவில்லை. இது போன்ற கருத்துக்களுக்கு முடிவுகள் கிடையாது.

கடந்த 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் வெற்றி குறித்து இலங்கை அணிக்கு எதிராக இதே கேள்வியை என்னாலும் கேட்க முடியும். இது ஒரு சுத்த பைத்தியக்காரத்தனமாக பேச்சு’ என கூறியுள்ளார்.

டோனி தலைமையிலான இந்திய அணி, இப்போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கிண்ணத்தை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.