பெற்றோர்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசத் தொடங்கும் பொழுது, காலா காலத்தில் கல்யாணம் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். வந்த வரன்கள் எல்லாம் வாசலோடு திரும்பிச் சென்று விடுகிறதே என்று சிலர் அங்கலாய்ப்பார்கள்.
எவர் எப்படி நினைத்தாலும் ஜாதகம் சாதகமாகச் செயல்படும் பொழுதுதான் திருமணம் நடைபெறும். இல்லையென்றால் தள்ளிக் கொண்டேதான் போகும். ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன்கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்றும் நினைக்க வேண்டும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானாதிபதி 6,8 ஆகிய இடங்களில் இருந்தால் திருமணத்தில் தடைகள் ஏற்படும்.
குடும்ப ஸ்தானத்தில் கேது நின்றாலும் செவ்வாய், சனி களத்திர ஸ்தானத்தில் சேர்க்கை பெற்று பலம் பெற்றாலும், அந்தப் பெண்ணிற்கு திருமணம் எளிதில் நடைபெறாது. தகுந்த பரிகாரங்கள் செய்தால் தான் மனதிற்கு ஏற்ற வரன் கிடைக்கும். தோஷ நிவர்த்திப் பரிகாரங்களை அனுகூலம் தரும் ஸ்தலங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்ய வேண்டும்.