இன்றைய தோல்விகள் யாவும் நாளைய வெற்றிக்குப் படிகளாக அமைய வேண்டும் முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன்

CV-Vigneswaran

போரின் அழிவுகளையும், அவலங்களையும் பொருட்படுத்தாது எதிர் காலத்தில் கல்வியிலும்,விளையாட்டிலும் முன்னணியில் உள்ள ஒரு மாகாணமாகத் திகழ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் தெரிவுப் போட்டி மற்றும் வீதி ஓட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை 7 மணியளலவில் இடம்பெற்றுது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய தோல்விகள் யாவும் நாளைய வெற்றிக்குப் படிகளாக அமைய வேண்டும். எனினும் விளையாட்டு நிகழ்வுகளில் எமது மாணவர்கள் வேகமாக முன்னேறிவரும் இன்றைய ஆரோக்கியமான நிலை தொடர வாழ்த்துகள்.

விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமன்றி கல்வியிலும் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் கல்வியில் உயர்ச்சி நிலையை அடைவதுடன் பண்பட்ட ஒரு சமூகத்தையும் உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்துகொண்டு பாடுபட வேண்டும்.

எதிர்பார்ப்புக்கு விஞ்சிய சாதனைகளை நாம் எமது இளைஞர் யுவதிகளிடம் இன்று எதிர் பார்க்கின்றோம்.

அத்துடன், நெஸ்லே நிறுவனத்தின் முழு ஆதரவில் இடம்பெறுகின்ற அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையேயான மினி மரதன் ஓட்டப் போட்டியின் தெரிவுப் போட்டிகள் வடமாகாணம், வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகிய மூன்று மாகாணங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டு வெற்றியாளர்கள் இறுதிப் போட்டிக்காக வடமாகாணத்தில் இதுபோன்ற பாடசாலைகளுக்கு இடையிலான நிகழ்வு முதல் முறையாக மிகச் சிறப்பாக நடைபெற்றிருப்பது எமக்கு மகிழ்வையும் மனத்திருப்தியையும் உண்டாக்குகின்றன.

நெஸ்லே நிறுவனத்தின் ஏற்பாட்டில் 2011ம் ஆண்டு வடமாகாணத்தில் சகல மட்டத்தினருக்கும் நடத்தப்பட்ட மரதன் ஓட்டப்போட்டியில் 7500 போட்டியாளர்கள் வரை கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பித்திருந்தமை நினைவு கூரப்படுவதுடன், அந்த நிகழ்வானது ஆசியாவிலேயே சிறந்த சாதனையாக இதுவரை முறியடிக்கப்படாத ஒரு RECORD ஆக விளங்குவது இந் நிறுவனத்திற்கு கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும்.

தூர ஓட்டமான மரதன் என்பதன் உத்தியோகபூர்வ ஓடுந் தூரம் 26 மைல் 385 யார்களாகும். வழமையாக இது தெருவில் ஓடும் ஓட்டப் பந்தயமாகவே இருந்து வருகின்றது.

பீடிபீடேஸ் என்ற கிரேக்க போர் வீரர் மரதன் என்ற இடத்தில் நடந்த போரில் அதென்ஸ் நகர கிரேக்கர்கள் வென்று விட்டார்கள் என்ற செய்தியை ஓடி வந்து அந்த மக்களுக்குத் தெரிவித்துவிட்டு உடனே உயிர் நீத்ததாகவும் அந்த நிகழ்வை நினைவுப்படுத்தும் முகமாகவே மரதன் ஓட்டப் போட்டி தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

1896 இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியபோது மரதனும் ஒரு தூர ஓட்ட நிகழ்வாக இருந்தது. ஆனால் ஓடவேண்டிய தூரம் 26 மைல்கள் 385 யார்களாகத் தீர்மானிக்கப்பட்டது 1921 ஆம் ஆண்டிலேயே.

இன்றைய மினி மரதன் ஓட்டப்போட்டியுடன் சேர்த்து இன்னோர் வீதி ஓட்ட நிகழ்வும் நடைபெற்றிருந்தது. மினி மரதன் 21கி.மீ தூரத்தையும் வீதி ஓட்டம் 5 கி.மீ தூரத்தையும் கொண்டதாக காணப்பட்டது.

இதில் கலந்து கொண்ட வீர வீராங்கனைகள் அனைவரதும் உடல்நிலை தகுதிகள் பற்றி யாழ். போதனா வைத்தியசாலை வைத்தியர்களால் இன்று காலை வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சான்றிதழ்கள் பெறப்பட்டவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்மூலம் அவர்களின் உடற்தகுதி நிலை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் இன்றைய போட்டிகள் இங்கிருந்து ஆரம்பித்து காங்கேசன்துறை வீதியூடாக தட்டாதெரு, சுன்னாகம் வரை சென்று மீண்டும் அப்பாதையில் திரும்ப வந்து துரையப்பா விளையாட்டு அரங்கை வீரர்கள் அடைந்திருக்கின்றார்கள்.

சன நெரிசல் மிகுந்த இவ்வீதியூடாக இந்நிகழ்வை வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஷான் பெர்ணான்டோ தொடக்கி வைத்தார்.

அத்துடன், 150க்கு மேற்பட்ட பொலிஸாரை வீதி ஒழுங்குப் பணிகள் மற்றும் வீரர்களுக்கான பாதுகாப்புக் கடமைகளுக்கு ஈடுபடுத்தினார்.

மேலதிகமாக 03 நோயாளர் காவு வண்டிகள், வைத்திய உதவியாளர்கள், மற்றும் மோட்டார் சைக்கிள் உதவியாளர்கள் என மிகக் கூடுதலான பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை இத்தருணத்தில் நன்றியறிதலுடன் நினைவுகூரப்படுகின்றது.

இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்படும் போது இந்த நிகழ்வுகளை சீராக ஒழுங்கு செய்வதோடு வீரர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுதல் மிக அத்தியவசியமாகும். அந்த வகையில் வடமாகாண பொலிஸ் துறையினர் மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளமை பாராட்டுக்குரியது.

எமது வீர வீராங்கனைகள் விளையாட்டு நிகழ்வுகளில் காட்டுகின்ற ஆர்வம் மற்றும் ஈடுபாடு என்பன வடமாகாண பாடசாலை மாணவ மாணவியருக்கு இடையேயான போட்டிகளின் போதும் எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இந்த வருடம் நடைபெற்ற போட்டிகளில் கடந்தகாலம் போன்று 15 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற பிரிவுகள் மாற்றப்பட்டு 12, 14, 16, 18, 20 என 5 பிரிவுகளாக தேசிய ரீதியில் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட பிரிவினருக்கான அடைவு மட்டங்கள் கல்வித் திணைக்கள அதிகாரிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தன.

ஓட்டப்பந்தயங்களில் எதிர்பார்த்த நேர அளவுகளை விடக் குறைவாகவும் மற்றும் களப் பந்தயங்களில் எதிர்பார்த்த உயர, தூர அளவுகளை விட கூடுதலாகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு அவர்களுக்கான சான்றிதழ்களுடன் மேலதிகமாக வர்ணச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதற்கான வர்ணச் சான்றிதழ்கள் 200 வரை போதுமானதென திணைக்களம் தீர்மானித்த போதும் போட்டியின் போது 350 சான்றிதழ்கள் வரை அவசர அவசரமாக அச்சேற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இதன்மூலம் எமது வீர வீராங்கனைகள் எமது எதிர்பார்ப்பை விஞ்சிவிட்டார்கள் என்ற உண்மை தெரிய வருகின்றது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்