கனடாவில் ஆறு குழந்தைகக்கு தாய் செய்த கொடூரம்

கனடாவில் தனது 6 குழந்தைகளின் இறந்த உடல்களை மறைத்து வைத்திருந்த பெண்ணிற்கு 8.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் மணிடோபா மாகாணத்தைச் சேர்ந்த ஆண்ட்ரியா கீஸ்பிரேசட் என்பவர் மீது 2014 ஆம் ஆண்டு தனது ஆறு குழந்தைகளின் இறந்த உடலை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

ஆண்ட்ரியா தனது ஒரு குழந்தையின் உடலை யு-ஹால் என்ற நிறுவனத்தில் உள்ள தனது லாக்கரில் மறைத்து வைத்திருந்திருக்கிறார். அவர் அந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்தாததால் அவரது லாக்கரை அந்நிறுவனத்தின் பணிபுரிபவர் திறந்து பார்த்த போது அதில் குழந்தையின் அழுகிய உடல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் ஆண்ட்ரியா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் மேலும் 5 குழந்தைகளின் உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைகளின் வயது 8-9 மாதங்கள் வரை இருக்கும். இதனை அடுத்து போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வின்னிபெக் நகர நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆண்ட்ரியாவுக்கு 8.5 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கினார்.

இது குறித்து நீதிபதி தாம்சன் கூறுகையில், அண்டிரியா தனக்கு குழந்தை பிறந்ததை பற்றி தனது கணவரிடம் இருந்து மறைத்துள்ளார். குழந்தைகள் உயிருடன் பிறந்துள்ளன. குழந்தைகளுக்கு மருத்துவ சிகிக்சை கொடுக்காததால் இறந்திருக்கலாம்.

அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியாவிற்கு இளம்வயதில் இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.