ஆறுதல் வெற்றியுடன் மகளிர் உலக கிண்ணத்திலிருந்து விடைபெறும் இலங்கை

மகளிர் உலக கிண்ணத்திற்கான குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. இத்தொடரின், இறுதி குழு நிலைப் போட்டியில் மோதிய இலங்கை மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல் வெற்றியை சுவீகரித்துள்ளது.

லெய்செஸ்டர் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்த இப்போட்டியில் எந்தவொரு வெற்றியையும் இந்த மகளிர் உலக கிண்ணத்தில் சுவைத்திராத பாகிஸ்தான் மகளிர் அணியும், இலங்கை மகளிர் அணியும் ஆறுதல் வெற்றியொன்றை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தன.

தொடர்ந்து மழை காரணமாக சற்று தாமதமாக இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியை தனதாக்கி கொண்ட இலங்கை மகளிர் அணியின் தலைவி இனோகா ரணவீர முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதன்படி துடுப்பாட மைதானம் விரைந்த இலங்கை மகளிர் அணியின் ஆரம்ப வீராங்கனைகள் இருவரும் குறைவான ஓட்டங்களுடன், பாகிஸ்தானின் டயானா பேய்கின் வேகத்திற்கு இரையாகினர். இதனால், ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனைகளில் ஒருவரான நிப்புனி ஹன்சிக்கா ஒரு ஓட்டத்துடனும், மற்றைய வீராங்கனையான ஹசினி பெரேரா 13 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

தொடர்ந்து துடுப்பாட வந்த இலங்கை வீராங்கனைகள் எவரும் பெரிதாக சோபிக்காது ஓய்வறை திரும்பியிருந்தனர். எனினும், ஐந்தாம் இலக்க துடுப்பாட்ட வீராங்கனையாக களம் நுழைந்த திலானி மனோதரா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை அணிக்காக சேகரித்தார்.

இவரின் சிறப்பான ஆட்டத்தோடும், பின்வரிசை வீராங்கனைகளான எஷானி லொக்குசூரியகே (28) மற்றும் அமா காஞ்சனா (21*) ஆகியோரின் பெறுமதி வாய்ந்த ஓட்டங்களின் துணையோடும், 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை மகளிர் தரப்பில் சிறப்பாக செயற்பட்டிருந்த திலானி மனோதரா அரைச்சதம் கடந்ததுடன், மொத்தமாக 111 பந்துகளில் 9 பவுண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றார்.

பாகிஸ்தான் மகளிர் அணியின் பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்டிருந்த டயானா பேய்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்.

இதனையடுத்து, வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 222 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணியானது தமது முதல் மூன்று விக்கெட்டுகளையும் 54 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து தடுமாறியது.

எனினும், மத்திய வரிசையில் களமிறங்கியிருந்த நயின் அபிதி அரைச்சதம் பெற்று இலக்கு தொடும் பயணத்தில் பாகிஸ்தான் மகளிர் அணியினை மீண்டும் கட்டியெழுப்பியிருந்தார்.

பாகிஸ்தானின் ஐந்தாவது விக்கெட்டாக சமரி அட்டபத்துவின் சாமர்த்தியமான ரன் அவுட் மூலம் நயின் அபிதி ஓய்வறை நோக்கி அனுப்பப்பட போட்டி சூடு பிடிக்கத்தொடங்கியது.

இவ்வாறனதொரு தருணத்தில், தமது பந்து வீச்சாளர்களை சரியான முறையில் உபயோகம் செய்திருந்த இலங்கை மகளிர் அணியினர் எதிரணி ஓட்டங்கள் சேர்ப்பதற்கும் அழுத்தம் தந்ததோடு, பாகிஸ்தான் மங்கைகளை குறைவான ஓட்டங்களுக்கும் ஓய்வறை நோக்கி அனுப்பியிருந்தனர்.

இதனால், முடிவில் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த பாகிஸ்தான் மகளிர் அணி 206 ஓட்டங்களை மாத்திரமே பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

பாகிஸ்தான் மகளிர் அணியில் நயின் அபிதி 9 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் 57 ஓட்டங்களையும், இறுதி வரை போராட்டத்தை வெளிப்படுத்திய அஸ்மாவியா இக்பால் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இலங்கை மகளிர் அணியின் பந்து வீச்சில், அபாரம் காட்டியிருந்த இடதுகை சுழல் வீராங்கனையான சந்திமா குணரத்ன 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அமா காஞ்சனா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.

இப்போட்டியின் மூலம் கிடைத்த ஆறுதல் வெற்றியுடன் இலங்கை மகளிர் அணி உலக கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறுகின்றது. அதேபோன்று, தொடரில் பெற்ற வெற்றி தோல்விகளின் மூலம் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் மகளிர் உலக கிண்ண அரையிறுதிப் போட்டிகளில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.