விழாவில் நடிகர் கார்த்தி பேசியதாவது:-
“பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 38 வருடங்களாக உதவி தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அகரம் பவுண்டேஷனும் இதில் இணைந்து இருக்கிறது. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு மட்டுமன்றி படிக்க வசதி இல்லாமல் கஷ்டப்படும் மாணவர்களுக்கும் உதவிகள் வழங்கி வருகிறோம்.
இந்த ஆண்டுமுதல் விஞ்ஞான கண்டுபிடிப்புகளிலும் விளையாட்டுகளிலும் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்குகிறோம். அகரம் பவுண்டேஷன் உதவியோடு கல்வி பயின்ற 750 பேர் பல்வேறு நிறுவனங்களில் வேலைக்கு தேர்வாகி இருக்கிறார்கள். இது மகிழ்ச்சி அளிக்கிறது.”
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் நடிகர் சிவகுமார் பேசியதாவது:-
“நான் பல்வேறு கஷ்டங்களை கடந்து நடிகனாகி 192 படங்களில் நடித்து இருக்கிறேன். அதன்பிறகு நடிப்பதை நிறுத்தி மகாபாரதம் கம்பராமாயணத்தை ஆராய்ச்சி செய்து சொற்பொழிவாற்றினேன். உடம்பை பேணி பாதுகாத்ததால்தான் இதையெல்லாம் செய்ய முடிந்தது. முகம், கை, கால்கள்தான் நமது அடையாளம். அதை தவிர்த்து பார்த்தால் ஒன்றும் இல்லை.
மாதத்தில் 20 நாட்களாவது நடைபயிற்சி செய்கிறேன். தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 5 மணிவரை யோகா செய்கிறேன். அதன்பிறகு ஒரு மணிநேரம் நடைபயிற்சி செய்கிறேன். கடைசி மூச்சு வரை நீங்கள் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றால் உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
லட்சியம் வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும். கல்வி வேண்டும், ஒழுக்கம் வேண்டும். இதனை கடைபிடித்தால் உங்கள் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.”
இவ்வாறு சிவகுமார் பேசினார்.