இன்று பலரும் சமூக வலைத்தளங்களிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். கருத்துச் சொல்வதும் சொற்போர் புரிவதும் ஒரு ரகம் என்றால், தங்கள் அந்தரங்க விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது இன்னொரு ரகம். அந்த அந்தரங்கமான விஷயங்களைத் தெரிந்தவர் தெரியாதவர் என்று பலருக்கும் பகிரும்போது, பெரும்பாலும் பெண்களே பிரச்சினையில் சிக்கிக்கொள்கிறார்கள்.
“சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்குக் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த இளைஞருடன் ஃபேஸ்புக் மூலமாக அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த இளைஞரை நம்பி அந்தப் பெண்ணும் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை இரண்டு நாட்களாக காரில் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த இளைஞர். பிறகு பண்ருட்டி அருகே ஒரு முந்திரித் தோப்புக்கு அழைத்துச் சென்று அவர் மீது இன்ஜின் ஆயிலை ஊற்றிக் கொளுத்த முயன்றிருக்கிறார். இதில் அந்தப் பெண்ணுக்கு நெற்றிப் பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர் எப்படியோ அங்கிருந்து தப்பித்திருக்கிறார். அருகிலிருந்த கிராமத்தினர் அவரை மீட்டுள்ளனர். இப்போது அவர் சிகிச்சை பெற்றுவருகிறார். நேரில் அறிமுகம் இல்லாமல் ஃபேஸ்புக் மூலமாக மட்டுமே கிடைக்கும் நட்புகளிடம் சற்றே எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்”
வேண்டாமே அந்தரங்கப் பகிர்வு
சமூக வலைத்தளங்கள் மூலம் காதல் வயப்பட்டுச் சிக்கலில் மாட்டிக்கொள்வது, பணத்தை இழப்பது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, இணையவழிக் குற்றங்களிலிருந்து பெண்கள் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“சமூக வலைத்தளம் என்பது ஒரு திறந்தவெளி. அதில் யார் வேண்டுமானாலும் ஊடுருவலாம். என்றைக்காவது திறந்தவெளியில் ஆடை மாற்றுவது குறித்து யோசித்திருப்போமா? ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டும் விதவிதமான படங்களை எவ்விதப் பாதுகாப்பும் இன்றிப் பதிவேற்றுவது ஏன்?
முதலில் ஃபேஸ்புக் கணக்கில் உங்கள் ‘செட்டிங்க்ஸ்’ பக்கத்துக்குச் சென்று உங்களது புகைப்படங்களை நெருக்கமாக அறிமுகமான நட்பு வட்டாரம் மட்டும் பார்க்கும்படி மாற்றுங்கள். தேவையில்லாமல் புகைப்படங்களைப் பதிவேற்ற வேண்டாம்.
பலரிடம் இருந்தும் நட்பு அழைப்புகள் வரலாம். ஆனால், தகுந்த ஆய்வு செய்யாமல் யாருடைய நட்பு அழைப்பையும் ஏற்கக் கூடாது.
எல்லாவற்றையும் கூகுளில் தேடும் நாம், சைபர் விழிப்புணர்வு குறித்தும் அதே முக்கியத்துவத்துடன் அறிந்துகொள்ள வேண்டும். நமது அந்தரங்கப் புகைப்படத்தை யாருடனாவது பகிர்ந்து, அது இணையத்தில் துஷ்பிரயேகம் செய்யப்பட்டால், பிறகு அதை நிரந்தரமாக நீக்குவதற்கான சாத்தியம் குறைவு. வெளிநாட்டிலிருந்து அந்தப் புகைப்படமோ வீடியோவோ பதிவேற்றப்பட்டிருந்தால், அதை நீக்குவதற்கான அனுமதி நமக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே, தேவையற்றதைத் தவிர்ப்பதுதான் சிறந்தது” என்கிறார் அந்த அதிகாரி.
பெற்றோர்கள் ஜாக்கிரதை
டேப்லட், லேப்டாப், விலையுயர்ந்த செல்போன் எனப் பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளையும் அதற்கு இணைய இணைப்பையும் பல பெற்றோர் இன்றைக்கு வாங்கிக் கொடுக்கிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகள் அவற்றில் எதையெல்லாம் பார்க்கிறார்கள் என்று என்றைக்காவது கண்காணித்திருக்கிறார்களா?
என் குழந்தைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன் என பெருமிதம்கொள்பவரா நீங்கள்? அப்படியென்றால் மிகப்பெரிய தவறு செய்துகொண்டிருக்கிறீர்கள். இணையவெளியில் என்னென்னவோ தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அத்தனையையும் கையாளும் அளவுக்கு ஒரு குழந்தைக்கு உளவியல் பக்குவம் இருக்கும் என்பதை எதை வைத்துத் தீர்மானிப்பது?
உங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் இணையக் கருவிகளில் பாதுகாப்புக்கான மென்பொருள்களை நிறுவுங்கள். நீங்கள் அலுவலகத்தில் இருந்தால்கூட அவர்கள் எதைப் பார்க்கிறார்கள் என்பதை அப்போது கண்காணிக்க முடியும்.
நீங்கள்தான் முதல் நண்பன்
குழந்தைகளை நாம் கண்காணிப்பது அவசியம். அதேவேளையில் அவர்கள் செல்லுமிடம் எல்லாம் நாமும் சென்றுகொண்டிருக்க முடியாது. குழந்தைகளுக்கு நாம்தான் முதல் நட்பாக இருக்க வேண்டும். எதையும் பெற்றோரிடம் பகிர்ந்துகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை, அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். 20 வருடங்களுக்கு முன் அப்பா வீட்டுக்குள் வந்துவிட்டால், ஒட்டுமொத்தக் குடும்பமுமே அமைதியாகிவிடும். ஆனால், இப்போது இறுக்கம் தளர்ந்துவிட்டது. குழந்தைகளுக்கு நிறையவே சுதந்திரம் இருக்கிறது.
அந்தச் சுதந்திரத்தால் அவர்கள் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, அவர்களுடைய முதல் நட்பாக பெற்றோர் இருப்பது அவசியம். ஃபேஸ்புக்கில் நீங்களும் ஒரு மியூச்சுவல் ஃபிரெண்டாக இருக்கும்பட்சத்தில், அவர்கள் எதைப் பதிவிடுகிறார்கள், என்ன மாதிரியான கருத்துகளைப் பகிர்கிறார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். அவர்கள் பதிவிடும் கருத்து சரியில்லை எனத் தோன்றினால், ஒரு நட்பைப் போலவே அங்கேயே டிஸ்லைக் செய்து ஒரு பின்னூட்டமும் இடுங்கள். உங்களுக்கு அந்த விஷயத்தில் விருப்பமில்லை என்பதை அவர்கள் நாசூக்காகப் புரிந்துகொள்வார்கள்.
எதைத் தொலைக்கிறோம்?
காதல் தவறல்ல. ஆனால், காதல் எதுவென்று தெரியாத மயக்கத்தில் கல்விப் பருவத்தை தொலைக்கலாமா? இப்போதெல்லாம் ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கும் நட்பு, பல நேரம் காதலாக மாறுகிறது. தொடர்ச்சியாக காதலுக்காக நடைபெறும் சண்டைகளும் அதிகரித்துவிட்டன.
காதலை மட்டுமே முதன்மைப்படுத்தி கல்லூரிக்குச் சென்றுவந்தால், நாம் தொலைத்த நேரமும் காலமும் நம் வளர்ச்சியைத் தடுத்துவிடும். ‘உனக்கு ஆள் இல்லையா?’ என்ற கேள்வி எழும்பும் பியர் பிரஷருக்கு இரையாக வேண்டிய அவசியமில்லை. காதல் இயல்பாகக் கைகூடட்டும், மெனக்கெடத் தேவையில்லை.
ஆண் பிள்ளைகளுக்கும்
ஆண் குழந்தைகளைச் சமூகப் பொறுப்புடன் வளர்க்கும் கடமை குடும்பங்களுக்கு இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் முகம் தெரியப் போவதில்லையே, எதையும் பேசி வைக்கலாம் என்கிற இளைஞர்களின் எண்ணம் மாற வேண்டும். பாதிப்பு பெண்ணுக்கு என்பதால் அத்துமீறுவது ஆண்களுக்கான அடையாளம் அல்ல. தன்னுடன் கல்வி பயிலும் அல்லது பணிபுரியும் பெண்ணை சக மனுஷி என்ற மாண்புடன் நடத்தப் பழக வேண்டும். இதை குடும்பத்தினர் உணர்த்த வேண்டும். எப்போது வீட்டிலிருந்து சமூகப் பார்வை விதைக்கப்படுகிறதோ, அப்போதுதான் சமூக மாற்றம் உறுதியாகும். மனிதனை விலங்கில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கிய பண்பு சுய ஒழுக்கம். அது இருபாலருக்கும் பொதுவானது.
எப்படி அடையாளம் காண்பது?
இணையக் குற்றவாளிகளை அடையாளம் காணவும் சில வழிகள் காவல்துறையில் இருக்கின்றன என்கிறார் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன்.
“உங்களுக்கு நட்பு அழைப்பு தருபவர்கள் புரொஃபைல் பிக்சராக சினிமா நடிகர், நடிகையின் போட்டோ வைத்திருந்தால் பெரும்பாலும் அது ஃபேக் ஐடியாக இருக்கக் கூடும். அவற்றை ஏற்றுக்கொள்வதில் எச்சரிக்கை தேவை.
தான் ஒரு பெரும் பணக்காரர், பகட்டானவர், அழகானவர் என இயல்புக்கு மாறான விஷயங்களை அவ்வப்போது வெளிப்படுத்திக்கொண்டே இருந்தால் மயங்கிவிடாதீர்கள். இன்பாக்ஸில் பேச ஆரம்பிக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை அறிந்துகொள்வதிலேயே அதிக ஆர்வம் காட்டினால், நோக்கத்தைப் புரிந்துகொள்ளுங்கள். உங்கள் அழகை வர்ணித்துப் பேசி மயக்க முயற்சிக்கலாம். எக்காரணம் கொண்டும் அந்தரங்கப் புகைப்படங்களை சாட் பாக்ஸில் பகிராதீர்கள்.
உங்கள் மீது அக்கறை இருப்பதுபோல் ஆறுதல் வார்த்தை கூறும் சாக்கில் இன்னும் நெருங்கிவர முயலலாம். சமூக வலைத்தளங்களில் பெண்கள் மட்டும்தான் ஏமாறுகிறார்கள் என்றில்லை. சில வேளைகளில் ஆண்களிடம் இனிமையாகப் பேசி எதிர்முனையில் இருப்பவரைத் தூண்டிவிட்டுப் பணம் பறிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. உங்கள் நிதிநிலைமை பற்றிய கேள்விகள் அடிக்கடி வந்தால் கவனமாக இருங்கள்.
ஃபேஸ்புக்கில் மட்டுமே பழக்கமான நபரை நேரில் சந்திக்கிறீர்கள் என்றால், தகுந்த முன்யோசனைக்குப் பின் தேவைப்பட்டால் மட்டுமே சந்தியுங்கள்.
உங்களை யாராவது பிளாக்மெயில் செய்தால் அதை நீங்களே சமாளிக்கலாம் என நினைக்காமல் முதலில் குடும்பத்தினரிடம் அதைப் பற்றி பேசுங்கள். தேவைப்பட்டால் காவல்துறை உதவியையும் அணுகுங்கள். புகார் அளிக்கத் தவறிவிடுவதாலேயே பல குற்றங்கள் நடந்தேறிவிடுகின்றன. சைபர் குற்றங்கள் 1% அளவுக்குதான் புகார்களாகப் பதிவாகின்றன. புகார்கள் பதிவாகும்பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கலாம்” என்கிறார் பாலகிருஷ்ணன்.