ஜனாதிபதி- பிரதமரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு!

ramy

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், போலி ஆவணங்களை வெளியிட்ட  குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் இன்று இடம்பெற்றன.

இந்த  வழக்கில் முதலாம் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்களாக ஜனாதிபதியும், பிரதமரும் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அவர்களை  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடமைகளின் நிமித்தம் அவர்களால் நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளதாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுட்டிக்காட்டியதுடன், இதற்காக பிறிதொரு தினத்தை வழங்குமாறும் அவர் கோரியிருந்தார்.

சாட்சியாளர்கள் தரப்பு கோரிக்கையை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதமன்ற நீதிபதி நிஸங்க நாணயக்கார, இருவருக்கும் மீளவும் அறிவித்தலை அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன், குறித்த வழக்கு எதிர்வரும்  டிசம்பர் 4ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.