சிம்பாப்வே அணிக்கெதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று சிம்பாப்வே அணியின் வரலாற்று வெற்றிக்கனவை தகர்த்தது.
இலங்கை –சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணியின் எர்வின் விளாசிய சதத்தால் (160) அந்த அணி முதல் இன்னிங்ஸில் 356 ஓட்டங்களைக் குவித்தது. பின்னர் முதல் இன்னிங் ஸை தொடங்கிய இலங்கை அணி 346 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்கள் முன்னிலையுடன் சிம்பாப்வே அணி 2ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
3ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் சிம்பாப்வே 6 விக்கெட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை எடுத்திருந்தது. சிகந்தர் ரசா 97 ஓட்டங்களுடனும், மெல்கம் 57 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 4ஆ-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே சிகந்தர் ரசா சதத்தை தொட்டார். மெல்கம் 68 ஓட்டங்களுடனும், சிகந்தர் ரசா 127 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த தலைவர் கிரிமர் 48 ஓட்டங்கள் எடுக்க சிம்பாப்வே அணி 2-ஆவது இன்னிங்ஸில் 377 ஓட்டங்களைக் குவித்தது.
சிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 10 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 387 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் இலங்கை அணியின் வெற்றிக்கு 388 ஓட்டங் கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களையும், 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் ஒரு போட்டியில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்கள் வரிசையில் நான்காவது இடத்தைப் பிடித்தார் ஹேரத். இவர் 81 போட்டிகளில் விளையாடி 8 முறை 10 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியுள்ளார். இதில் முதலிடத்தில் இலங்கையின் சுழல் ஜாம்பவான் முரளிதரன் இருக்கிறார். இவர் 133 போட்டிகளில் 22 முறை 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
அதன்பிறகு 388 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கியது.
உபுல் தரங்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இதில் 27 ஓட்டங்களுடன் தரங்க ஆட்டமிழக்க, குசல் மெண்டிஸ் களமிறங்கினார். மறுமுனையில் நின்ற திமுத்தும் 49 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த சந்திமாலும் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மெத்தியூஸ் களமிறங்கினார். மெத்தியூஸ் 17 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 60 ஓட்டங்களுடனும் களத்தில் நிற்க இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் கடைசி நாளான இன்று இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் இன்றைய நாளுக்குள் 7 விக்கெட்டுகள் கையிலுள்ள நிலையில் 218 ஓட்டங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கோடு களமிறங்கிய இலங்கை அணியின் மெத்தியூஸ் மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடியபோதும் மெத்தியூஸ் 25 ஓட்டங்களுடனும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களுடம் ஆட்டமிழந்தனர்.
இந்நிலையில் களமிறங்கிய நிரோஷன் டிக்வெல்ல மிகவும் பொறுப்புடன் ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க அவரும் 81ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது பிடிகொடுத்து மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
பின்னர் இணைந்த அசேல குணவர்தன மற்றும் டில்ருவான் பெரேரா ஜோடி மிகவும் நிதானமாக ஆடி சிம்பாப்வேயின் வரலாற்று வெற்றிக்கனவை பறித்தெடுக்க இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றிபெற்று 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி நிம்மதிப்பெருமூச்சு விட்டது.