பாடசாலை சீருடை மாற்றம் தொடர்பாக கல்வியமைச்சு மேற்கொண்ட செயற்பாடுகள்

visakha-uniform

டெங்கு நோய் தீவிரமாகியுள்ள பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்கள் தங்களை நுளம்புக்கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களது பாடசாலை சீருடைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அனுமதியை கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு வழங்கியுள்ளது.

அதன்பிரகாரம் மாணவர்கள் அரைக் காற்சட்டைக்குப் பதிலாக முழுக் காற்சட்டைகளையும், மாணவிகள் கவுண்களுக்கு மேலதிகமாக நீளக் காற்சட்டைகளையும் அணியலாம். அவ்வாறே இருசாராரும் முழுக்கை சட்டைகளை அல்லது ரீ ஷேர்ட்டுகளை அணியலாம்.

மாணவர்களின் நீளக் காற்சட்டைகள் நீலம் அல்லது வெள்ளை நிறங்களிலும், மாணவிகள் கறுப்பு அல்லது வெள்ளை நிறங்களிலும் அணிவது விரும்பத்தக்கது எனவும் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், நுளம்புக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தைலம் அல்லது கிரீம் வகைகளையும் மாணவ, மாணவிகள் தங்கள் கை கால்களில் பூசிக்கொள்ளலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக வகுப்பறைகளையும், பாடசாலை வளவுகளையும் துப்புரவாக வைத்திருப்பதற்கு பாடசாலை நிர்வாகமும், பெற்றோர்களும் கூடிய கவனம் செலுத்தவேண்டும் எனவும் கல்வி அமைச்சு அறிவுரை வழங்கியிருக்கின்றது.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளின் பொதுசன சுகாதார வைத்திய அதிகாரிகளும் தங்களது உச்சபட்ச ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.