அயர்லாந்து நாட்டு பெண் ஒருவரை கடத்திச் செல்ல முயற்சித்ததாக கூறப்பட்ட முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது காதலனுடன் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், எல்ல பிரதேசத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்காக கித்தல்எல்ல பிரதேச சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்தார்.
அந்த வெளிநாட்டவர்கள் எல்ல நகரத்திற்கு சென்று சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். பின்னர் எல்ல நகரத்தில் வாடகை முச்சக்கர வண்டி ஒன்றை பெற்று கொண்டு கித்தல்எல்லவில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர்.
அங்கு முச்சக்கர வண்டி சாரதியினால் மலை பகுதியில் வைத்து முச்சக்கர வண்டியினால் மலை ஏறி செல்ல முடியவில்லை என தெரிவித்து அந்த இளைஞர் சற்று தூரம் நடந்து வருமாறு சாரதி குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அந்த பெண்ணை மாத்திரம் முச்சக்கர வண்டியில் வைத்து கொண்டு வேகமாக சாரதி முச்சக்கர வண்டியை ஓட்டி சென்றுள்ளார்.
வெளிநாட்டு பெண் கடத்தி செல்லப்பட்டதனை அறிந்த இளைஞர் கூச்சலிட ஆரம்பித்துள்ளார். சத்தம் கேட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிலர் முச்சக்கர வண்டியை துரத்தி சென்றுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு பெண் முச்சக்கரவண்டியில் இருந்து வெளியே குதித்து அருகில் உள்ள வீட்டிற்கு சென்று உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார்.
சந்தேக நபரான முச்சக்கர வண்டி சாரதி அந்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்து குதித்தமையினால் காயமடைந்த பெண் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.