சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலைமைகள், அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள், நல்லிணக்கச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்புக்குப் பின்னர், கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், ”சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்பட்டாலேயே புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியும்.
தமக்கிடையிலான போட்டிகளைக் கைவிட்டு இரண்டு கட்சிகளும் புதிய அரசியலமைப்பை உருவாக்க உதவ வேண்டும்.
தேசியப் பிரச்சினையைத் தீர்க்க இரண்டு கட்சிகளும் முன்வர வேண்டும். அதற்கு அனைத்துலக சமூகம் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.