நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்க வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், அமெரிக்காவின் தீவிரவாத சட்டத்தினால் அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பு நிராகரிக்கப்படலாம் என்று அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாகச் சென்றவர்களில், அடைக்கலம் பெறுவதற்குத் தகுதி பெற்ற ஒரு தொகுதியினரை நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள கடல் கடந்த முகாம்களில் அவுஸ்ரேலியா, தங்க வைத்துள்ளது,
இவர்களை மூன்றாவது நாடு ஒன்றில் குடியேற்றுவதற்கான முயற்சிகளிலும் அவுஸ்ரேலியா ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, நௌரு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை தமது நாட்டில் குடியேற்றுவதற்கு அமெரிக்கா இணங்கியிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளும் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
எனினும், நௌரு மற்றும் மனுஸ் தீவு முகாம்களில் உள்ள 240 இலங்கைத் தமிழ் அகதிகளில், பெரும்பாலானவர்கள், அமெரிக்காவில் குடியேறும் வாய்ப்பை இழக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்ரெம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலை அடுத்து அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட தேசப்பற்று சட்டத்தினாலேயே இலங்கைத் தமிழ் அகதிகள் அமெரிக்காவில் குடியேறுவதற்கான தகுதியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வடக்கில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் பெரும்பாலான தமிழ்ப் பிரதேசங்கள் இருந்தன. இதனால், அங்கு வாழ்ந்தவர்கள், விடுதலைப் புலிகளுக்கு பொருள் உதவி வழங்கியவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
குடியேற்றக் கொள்கை தொடர்பான வொசிங்டன் நிறுவகனத்தின் இணை நிறுவுனரான, கத்தே நியூலன்ட் இதுகுறித்து தெரிவிக்கையில், இந்த பொருள் ஆதரவு என்ற விடயம் மிகவும் பரந்துபட்ட ஒன்று என விபரித்தார்.
பணம், உணவு, இருப்பிடம், பயிற்சி, மற்றும் எல்லா வகையான உதவிகளும் இதில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அங்கு சித்திரவதை அபாயங்களை எதிர்கொண்டுள்ளனர். இதனை ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனும் கடந்தவாரம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இந்த நிலையில், நௌரு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள அகதிகளுக்கு மாற்று இடம் ஒன்றைத் தேட வேண்டிய நிலை அவுஸ்ரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
இங்கு தங்கியுள்ள அகதிகளை மூன்றாவது நாடு ஒன்றில் குடியேற்றுவதற்கு நாம் தொடர்ந்து பணியாற்றுகிறோம். இல்லாவிட்டால், பபுவா நியூகினியாவில் குடியமர்வதை விட அவர்களுக்கு வேறு வழியில்லை என்று அவுஸ்ரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் தெரிவித்துள்ளார்.