தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காமெடியன்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் யோகி பாபு. இவர் திரையில் தோன்றினாலே ரசிகர்களிடம் சிரிப்பு சத்தம் தொடங்கி விடுகின்றது.
அதிலும் சமீபத்தில் வந்த ரெமோ, ஆண்டவன் கட்டளை படங்களில் இவருடைய காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா ஷோவில் நடித்தார். அதில் பெரிய கதாபாத்திரம் கூட இல்லை.
ஹீரோவிற்கு பின்னால் நிற்கும் கதாபாத்திரத்தில் வந்து செல்வார், அந்த ஷோவின் ஹீரோ சந்தானம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் நடிப்பை பார்த்து லொள்ளு சபா இயக்குனர் தன்னுடனேயே வைத்து கொண்டார். அவரிடம் தொடர்ந்து 2 வருடங்கள் அசிஸ்டென்டாக இருந்தார்.
அந்த காலக்கட்டத்தில் சாப்பாட்டுக்கு கூட கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு டீயை மட்டுமே குடித்து காலம் கழித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து அமீர் நடித்த யோகி படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார், பிறகு கலகலப்பு, யாமிருக்க பயமே என ஒரு சில படங்களில் தலையை காட்டினார்.
அதிலும் யாமிருக்க பயமே படத்தில் ‘பன்னி மூஞ்சு வாயன்’ கதாபாத்திரம் பலராலும் கவரப்பட்டது, பிறகு தெறி, வேதாளம் என முன்னணி நடிகர்களின் படங்களில் தலையை காட்ட, தற்போது முன்னணி காமெடியனாக வளர்ந்து வர தொடங்கிவிட்டார்.
இதெல்லாம் விட யோகி பாபு மாநில அளவில் கால்பந்து போட்டியில் கலந்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.