அமைச்சர்கள் ஊழல் விவகாரம்: கமல்ஹாசனுக்கு ஆதரவு பெருகுகிறது

அமைச்சர்கள் ஊழல் விவகாரம்: கமல்ஹாசனுக்கு ஆதரவு பெருகுகிறது

சென்னை:

தமிழ்நாட்டில் எல்லா துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டது என்று நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கூறினார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர். மக்கள் மத்தியிலும் கமல்ஹாசன் கருத்துக்கு ஆதரவு கிடைத்தது.

கமல்ஹாசனின் வெளிப்படையான குற்றச்சாட்டு அமைச்சர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. “கமல்ஹாசன் நடிகர்தான். அவருக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது. அரசியலுக்கு வந்து விட்டு எங்களைப் பற்றி பேசட்டும்” என்று அமைச்சர்கள் கூறினார்கள்.

ஒரு அமைச்சர் பேட்டியளிக்கும் போது, “ஊழல் புகார்களை நிரூபிக்கத் தயாரா? எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தை காட்ட முடியுமா?” என்று சவால் விட்டார்.

இந்த சவாலை ஏற்றுக்கொண்ட நடிகர் கமல்ஹாசன், நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதற்கு பதிலடி கொடுத்தார்.

அவர் தனது அறிக்கையில், “எனது ரசிகர்களும், காசுக்கு விலை போகாத தமிழக வாக்காளர்களும் இவ்வரசின் காலத்தில், ஊழலால் அனுபவித்த இன்னல்களை விளக்கிக் கேள்வியுடன் சேதியை அமைச்சர்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்பி வையுங்கள்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஊழல் புகார்களை அனுப்ப வேண்டிய இணைய தள முகவரியையும் கொடுத்துள்ளார்.

தமிழக அமைச்சர்களின் இலாகாக்களில் நடக்கும் ஊழல்களை ஆதாரத்துடன் நிரூபிக்க கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி செயல்பாடு, அனைத்து தரப்பு மக்களிடமும் ஏகோபித்த வரவேற்பையும், ஆதரவையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை ஆட்சியாளர்களுக்கு எதிராக எந்த ஒரு உச்ச நடிகரும் இப்படி துணிச்சலாக குரல் கொடுத்ததில்லை.

ஏற்கனவே தமிழ்நாட்டின் தொழில், விவசாயம் மற்றும் அத்தியாவசிய உள் கட்டமைப்புப் பணிகளில் காலத்துக்கு ஏற்ற வளர்ச்சியும் மேம்பாடும் இல்லை என்ற குமுறலும், அதிருப்தியும் மக்களிடம் உள்ளது.

குறிப்பாக கொள்கை முடிவுகளில் தடுமாற்றம் இருப்பதாக இளைஞர்களும், மாணவர்களும் கருதுகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசை தட்டிக்கேட்க நடிகர் கமல்ஹாசன் முன் வந்திருப்பது அவர்களிடம் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் கொடுத்துள்ளது.

இதன் காரணமாக நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த வி‌ஷயத்தில் ஆதரவு பெருகத் தொடங்கியுள்ளது. திரை உலக பிரமுகர்கள் பலரும் கமல்ஹாசனை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

அரசியல் கட்சிகளை பொருத்தவரை பா.ஜனதா, தவிர மற்ற கட்சிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளன. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல் நபராக, கமல்ஹாசன் கருத்தை வரவேற்றார். அவரைத் தொடர்ந்து மற்ற கட்சிகளும் கமலை ஆதரித்துள்ளன.

அரசியல், சினிமா துறையில் உள்ளவர்கள் தவிர இதர துறைகளில் இருப்பவர்களும் கமல்ஹாசன் ஊழலுக்கு எதிராக புறப்பட்டு இருப்பதை ஆதரிக்கிறார்கள். அவர்கள் வெளிப்படையாக களத்துக்கு வராவிட்டாலும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக உள்ளனர்.

இந்த நிலையில் கமல்ஹாசன் ரசிகர்களும், பொது மக்களும், இணைய தளம் வாயிலாக ஊழல் புகார்களை அனுப்பத் தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தில் சுமார் 20 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் கணிசமானவர்கள் நிர்வாக பொறுப்புகளில் இருக்கும் தீவிர உறுப்பினர்களாவார்கள்.

இவர்கள் தாங்கள் சந்தித்த ஊழல் இன்னல்களை தொகுத்து அமைச்சர்களின் இணைய தளங்களுக்கு அனுப்பி வருகிறார்கள். சில மாவட்டங்களில் உள்ள ரசிகர்கள் தங்கள் பகுதியில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி போட்டி போட்டு புகார் களை அனுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.

சில அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடைபெறும் என்ற நிலை உள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர்கள் புகார் மனுக்களை அனுப்ப தொடங்கி உள்ளனர்.

கமல்ஹாசனின் வேண்டுகோளை ஏற்று ஊழல் புகார்கள் வரத் தொடங்கி இருப்பதால் அரசுக்கு புதிய தலைவலியும் நெருக்கடியும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.